சமுர்த்தி பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

ruppes fivet
ruppes fivet

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்டுள்ள தரப்பினருக்கு புத்தாண்டுக்கான 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையில் இருந்து விலகுவதற்கு கிராம சேவகர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், மற்றும் சமுர்த்தி வங்கி அதிகாரிகள் நேற்று தீர்மானித்தனர்.

சித்திரைப்புத்தாண்டு காலப்பகுதியில் அரசாங்கம் இவ்வாறு அவசர தீர்மானங்களை மேற்கொள்வதனால் தமது தரப்பினர் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் குற்றம்சுமத்தியிருந்தன.

எவ்வாறாயினும், குறித்த நிவாரண கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கையில் தமது சங்கம் ஈடுபட்டு வருவதாக இலங்கை ஐக்கிய கம்பத கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர் கீர்த்தி திஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் வினவியது, அதற்கு பதிலளித்த அமைச்சர், எதிர்பார்த்தப்படியே குறித்த வேலைத்திட்டம் இன்று முற்பகல் முதல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இன்று விடுமுறை நாள் என்ற போதிலும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த கொடுப்பனவை வழங்குவதில் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

கிராம சேவகர்கள் பிரிவிற்கு சென்று குறித்த நிவாரண கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கையில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படாமையால் இன்று முற்பகல் ஹட்டன் சமுர்த்தி அலுவலகத்திற்கு வருகை தந்த மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.