தொல்லியல் திணைக்கள வழக்கில் தவிசாளர் நிரோஷ் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார்!

30419972 10208789010121808 4501253326451983571 o 1
30419972 10208789010121808 4501253326451983571 o 1

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி காவல்துறையினருக்கு அறிவுறுத்தியதுடன் தவிசாளர் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொல்லியல் திணைக்களம் நிலாவரையில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கைக்கு தவிசாளர் தடை ஏற்படுத்தினார் என்றும் இதன் மூலம் அரச கருமத்திற்கு தடை ஏற்படுத்திய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கமைய அச்சுவேலி காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நீதிபதி ஆனந்தராஜா முன்னிலையில் இன்று (21) மாலை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில், தவிசாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். அவர்கள் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இக் கிணற்றில் இருந்து அப்பால் தான் தொல்லியல் திணைக்களத்தின் முயற்சி இடம்பெற்றுள்ளது. பிரதேச சபை தொடர்ச்சியாக குறித்த இடத்தினை அரச பெறுகை கேள்விக்கோரல் நடைமுறைகளின் பிரகாரம் குத்தகைக்கு வழங்கிவந்துள்ளது.

காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக் கோவை சரத்தின் பிரகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே மேற்படி வழக்கின் குற்றப்பத்திரத்தினைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். நிலாவரையில் பிரதேச சபை பல முதலீடுகளைச் செய்துள்ளது. தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சரே மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெற்றே தொல்லியல் திணைக்களம் செயற்படும் என உத்தரவாதமளித்துள்ளார். ஆனால் இங்கு பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் என்ன நடக்கிறது என்ற விபரத்தினைக் கேட்டால் அரச கருமத்திற்கு தடை ஏற்படுத்தினார் என்கின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபையின் தலைவர் என்ற வகையில் தவிசாளார் அங்கு என்ன நடக்கின்றது எனக் கேள்வி எழுப்பியமையை அரச கடமைக்கு தடை ஏற்படுத்தியதாகக் கருதமுடியாது. நிர்வாக ரீதியாக இரு அரச நிறுவனங்களுக்கு இடையே எழும் பிரச்சினையினை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் அணுகமுடியாது எனவே இவ்வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

தனியாராக இருந்தாலென்ன அரச தாபனமாக இருந்தா​லென்ன பிரதேச சபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்த அச்சுவேலி காவல்துறையினர் தாம் இவரை முதலாவது எதிராளியாகக் கொண்டு மேலும் பலருக்கு இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மன்றில் தெரிவித்தனர். அத்துடன் மன்றில் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந் நிலையில் நீதிபதி காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக்கோவை சரத்தின் பிரகாரம் முதலாம் எதிராளியாக மன்றில் முன்னிலையாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதாக எங்கும் வெளிப்படுத்தவில்லை. அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து இவ் வழக்கினை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கினைத் தொடருமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை மன்றில் பிரசன்னமாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேலதிக விசாரணைகள் ஏற்படின் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கும் உத்தரவிட்டு அனுமதித்தார்.