இந்த நாடு அவமானப்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல – கஜேந்திரகுமார்

kajenthirakumar
kajenthirakumar

இந்த நாடு அவமானப்பட வேண்டும் என்பது எமது நோக்கமல்ல. ஆனால், ஆளுகைக் கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே  இவ்வாறு கூறிய அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

 “உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமக்கு நம்பிக்கையில்லை என்பதை அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் அரசு இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக்காட்டியுள்ளது. இதனைத்தான் தமிழ் மக்களும் 2009ஆம் ஆண்டுமுதல் வலியுறுத்துகின்றனர். இதன் ஊடாக போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளே பொருத்தமானதாக அமையும் என்பதற்குச் சிறந்த முன்னுதாரணத்தை அரசு வழங்கியுள்ளது.

நானும் எனது கட்சியும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டவர்கள். இது தொடர்பில் நீதிமன்றில் போராடினோம். நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்தோம். அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்டே எமக்கு எதிரான பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் நான் தனிப்பட்ட ரீதியில்  குற்றம் சாட்டப்பட்டிருந்தேன். பின்னர்  விடுவிக்கப்பட்டேன். பின்னர் எனது நண்பர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த நாட்டில் மோசமான ஒரு கலாசாரம் உள்ளது. அமையும் ஒவ்வொரு அரசும்  முன்னைய அரசுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே  அது. தற்போதுள்ள அரசு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கி நியாயமான தீர்ப்பு முறையில் நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. அரசானது நீதிமன்றத்துக்குச் செல்லாது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாது முந்தைய அரசின் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆணைக்குழுவின் ஊடாக தீர்வுகாண முற்படுகின்றது.

இப்போது நடப்பதைப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மகிழ்ச்சியடைவர். கடந்த சில ஆண்டுகளாகக் கையாளப்பட்ட நீதித்துறை முறைமையற்றது என விளங்கியுள்ளது. இந்த அரசு தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை நியாயமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் சர்வதேச சமூகத்துக்கு இதனை அரசு நிரூபித்துக்கொண்டிருக்கின்றது.

போரின்போது தமிழ் மக்களுக்கு மிகவும் பாரதூரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. இந்த விசாரணை ஆணைக்குழுவின் ஆணை அதிகார வேறாக்கத்தைதயும் சட்ட விதியையும் மீறுவதான அல்லது அதற்கு முரணானதாக உள்ளது. பல்வேறு நிறுவனங்களின் சுயாதீன தன்மைகளை மூழ்கடித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.