உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: மைத்திரி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக மேலும் 107 வழக்குகள்!

b0f48 dfd33b21 1ed1 4304 925e 16f9e7e9b5ab 1 1
b0f48 dfd33b21 1ed1 4304 925e 16f9e7e9b5ab 1 1

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே தகவல் கிடைத்தும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 6 பேருக்கு எதிராக மேலும் 107 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொச்சிக்கடை சென்ட் அந்தோனியர் தேவாலய குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

கடுவாப்பிட்டிய சென்ட் செபஸ்டியன் தேவாலய குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வாரம் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் 182 வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால உட்பட 6 பேருக்கு எதிராக இதுவரையில் 289 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் அனைவரும் நட்டஈடு கோரியுள்ளதோடு, கடுவாபிடிய தேவாலயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ள நட்டஈட்டின் மொத்த தொகை 1,250 மில்லியன் ரூபா ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் பிரதானி நிலந்த ஜயவர்தன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த வழக்குகளின் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்தும், தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.