முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க நீதிமன்றம் வரை சென்றவர்கள் ஆடைத்தொழிற்சாலைகளை மூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை-விஜிந்தன்

DSC01117
DSC01117

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுக்க நீதிமன்றம் வரை  சென்றவர்கள் ஆடைத்தொழிற்சாலைகளில் கொரோனா கொத்தணிகள் உருவாகி வருகின்றபோதும் ஆடைத்தொழிற்சாலைகளை மூட ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் இன்று (21.05.2021) அவரது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை  நடத்தியுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

முல்லைத்தீவு பகுதி கொரோனா கொத்தணியாக மாறிவருகின்றது முல்லைத்தீவு பகுதி இவ்வாறு மாறியதற்கு முழுபொறுப்பும் புதுக்குடியிருப்பில் இயங்கிவருகின்ற ஆடைத்தொழில்சாலைதான் பொறுப்பு சொல்லவேண்டிய கடைப்பாடு இருக்கின்றது.

கடந்த காலங்களில் ஆடைத்தொழில்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட போது அதனை மூடுவதற்கு அதன் நிர்வாகம் சரியான முடிவினை எடுக்கவில்லை அரசாங்கமும் அதற்கான சரியான அழுத்தத்தினை கொடுக்கவில்லை

கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை தடுக்கின்ற நோக்கோடு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் வரை சென்று தடைசெய்த அரசாங்கம் ஆடைத்தொழில்சாலைகளின் இவ்வாறான செயற்பாட்டினை இடைநிறுத்துவதற்கான முயற்சி குறைவாக காணப்படுகின்றது.

உயர் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கும் காரணம்.கிளிநொச்சி,வவுனியா ஆடைத்தொழில்சாலைகள் இன்றும் இயங்கிவருகின்றது பல நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கு வேலை செய்கின்றார்கள் ஆடைத்தொழில்சாலைகளை மூடி  மக்களை பாதுகாக்கின்ற முயற்சி போதாததாக காணப்படுகின்றது.

இவ்வாறு செல்லுமாக இருந்தால் இந்த பகுதி பல இலட்சக்கணக்கான கொரோனா தொற்றாளர்களை சுமக்கவேண்டிய நிலையும்,பல ஆயிரக்கணக்கானவர்களை இழக்கவேண்டிய நிலையும் உருவாகும்.
அரசாங்கத்திடமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் நாம் கேட்டுக்கொள்வது இந்த ஆடைத்தொழில்சாலைகளை  தற்காலிகமாக இடைநிறுத்தி பெறுமதி மிக்க உயிர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேவளையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது,கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது எனவே தனிமைப்படுத்தப்படுகின்ற முடக்கப்படுகின்ற காலங்களில் அரசாங்கம் உடனடியாக அவர்களுக்கு வறுமையினை குறைக்கின்ற வகையில்  உணவு பொதிகளை வழங்குகின்ற சரியான பொறிமுறையினை அரசாங்கம் கடைப்பிடிக்கவேண்டும்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலோ அல்லது முடக்கமோ ஏற்படுகின்றபோது மக்களுக்கான குடிதண்ணீர் போன்ற சேவைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் கிராமசேவகரிடம் அல்லது வட்டார மக்கள் பிரதிநிதிகளிடம் அல்லது  உப அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் பிரதே சபையினால் மேற்கொள்ளக்கூடிய சகல வசதிகளையும் இலவசமாக மேற்கொள்ள அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன் எனவே தேவையுடைய மக்கள் அவர்களை தொடர்புகொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.