இளைஞர்கள் நாட்டைவிட்டு தப்பியோட அரசே காரணம்! – சுமந்திரன்

MP MA Sumanthiran 850x460 acf cropped 710056
MP MA Sumanthiran 850x460 acf cropped 710056

நாட்டிலுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே எமது இளைஞர்கள் இன்றும் ஆபத்தான வழிகளில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்கின்றனர். இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.

என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்தியாவில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட 61 இலங்கையர்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இந்த நாட்டில் முன்னர் அரசியல் நெருக்கடி காரணமாகவே எமது இளைஞர்கள் இங்கிருந்து வெளியேறினார்கள். ஆனால், தற்போது அதிக பொருளாதார நெருக்கடி காரணமாகவும் நாட்டைவிட்டு அவர்கள் வெளியேறுகின்றார்கள்.

முகவர்களிடம் அதிக பணத்தை வழங்கி உயிர் ஆபத்தான வழிகளிலேனும் பாதுகாப்பாக சுதந்திர நாடுகளில் தொழில் செய்வோம் என்ற மனநிலையில் அவர்கள் தப்பிச் செல்கின்றனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் எனக் கருதப்படுபவர்கள்தான் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான வழியிலாவது நிம்மதியாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் பெருந்தொகைப் பணத்தைத் திரட்டி முகவர்களிடம் வழங்கி பயணித்தவர்கள் இன்று பணத்தையும் இழந்து சிறையில் வாடும் அவலம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

அரசின் தவறான கொள்கைகளால் தொடர்ந்தும்  எமது இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகின்றது – என்றார்.