அரசாங்கத்திற்கு மக்கள் நல்ல பாடத்தினை புகட்ட வேண்டும் – தவராசா கலையரசன்

IMG 20210615 191754
IMG 20210615 191754

அரசாங்கத்திற்கு மக்கள் நல்ல பாடத்தினை புகட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மிகவும் அராஜகமான அரசியல் நடந்து கொண்டிருக்கின்றது. கடந்த காலங்களில் மிக மோசமாகக் குற்றங்களைச் சுமத்தியவர்கள் தற்போது அதனை விட மோசமான செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நாட்டில் சாதாரண மக்கள் வாழ முடியாத ஒரு சூழலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் ஒரு பொய்யான வாக்குறுதிகள் என்பதை அவர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இன்று எரிபொருள் மாத்திரமல்ல விவசாயிகளும் வாழ முடியாத ஒரு நிலைமையை அவர்கள் எற்படுத்தியிருக்கின்றார்கள். உரம் மற்றும் கிருமிநாசினிகளை விவசாயிகள் பெற முடியாத நிலையில் இருக்கின்றார்கள். உரிய விலையை விட மேலதிகமாகத் தொகை கொடுத்து தங்கள் பயிர்களைக் காப்பற்றக் கூடிய சூழ்நிலைக்கு இன்று விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். உர விடயத்தில் அரசாங்கம் முற்கூட்டியே விவசாயிகளுக்கான விளக்கங்களை வழங்கியிருக்க வேண்டும். எவ்வித முன்னறிவிதலுமின்றி இவ்வாறான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் செய்கின்றது.

இன்று எரிபொருள் விலையேற்றத்தில் உரிய அமைச்சர் ஒரு கருத்தும், இந்த நாட்டின் தலைவர் ஒரு கருத்தும் ஏனைய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஒவ்வொரு கருத்தும், நாடாளுமன்ற உறுப்பினார்கள் ஒரு கருத்துமாக அவர்களுக்குள்ளேயே முட்டிமோதுகின்ற ஒரு நிலை காணப்படுகின்றது. இதனைப் பார்க்கின்றபோது, ஒரு சீரான அரசியலைச் செய்ய முடியாத தலைவர்களாக இந்த நாட்டின் தலைவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறானவர்கள் எங்கள் மக்களை கவனிப்பார்களா? என்ற கேள்வியே எழுகின்றது. அது மட்டுமல்லாது எமது தமிழ் மக்களை எவ்வாறெல்லாம் நசுக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அவர்களின் செயற்பாடுகள் இருக்கின்றன. இந்த அரசின் அனைத்து செயற்பாடுகளினூடாகவும் பாதிக்கப்பட்டவர்களாக நாங்களே இருக்கின்றோம். எனவே இந்த அரசாங்கத்திற்கு இந்த நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ஒரு நல்ல பாடத்தினைப் புகட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.