அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்- சுதந்திர கட்சி

Rohana Lakshman
Rohana Lakshman

ஆளுங்கட்சியின் கூட்டணிக்குள் இருந்தாலும் பாரபட்சமான முறையிலேயே பங்காளி கட்சிகள் வழிநடத்தப்படுகின்றனர். எவ்வித கலந்துரையாடல்களுக்கோ தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களிலோ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

அரசாங்கத்திற்குள் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து வினவிய போதே பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வீரகேசரிக்கு இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசாங்கத்தின் பிரச்சினையாகும். எரிபொருள் விலை அதிகரிப்பிற்காக விடயத்திற்கு பொறுப்பான உதயகம்மன்பில பதவி விலக வேண்டுமெனில் உரம் தொடர்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று அதனுடன் தொடர்புடைய அமைச்சர் பதவி விலக வேண்டும். அதே போன்று பேர்ள் கப்பல் விவகாரத்தில் துறைமுக அமைச்சரும், கொவிட் தொற்றால் கல்வித்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் என சகலரும் பதவி விலக வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகிறது.

நாட்டில் இன்று பிரச்சனை அற்ற துறை எது? எனவே ஒவ்வொருவர் மீது பொறுப்பினை சுமத்தி நாட்டை நிர்வகிக்க முடியாது. அமைச்சரவை ஒத்துழைப்புகள் இங்கு முக்கியத்துவமுடையவையாகவுள்ளன. எரிபொருள் விலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள சாகர காரியவசம் ஏன் விவசாயிகளின் உரப்பிரச்சினை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை? எனவே அரசாங்கம் தற்போது பொதுவானதொரு தீர்மானத்திற்கு வர வேண்டும்.

எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திலுள்ள கூட்டணியில் காணப்படுகின்ற பிரச்சினைகளே இன்று வெளிப்பட்டுள்ளன. காரணம் அரசாங்கத்தின் பங்காளி கட்சியொன்றின் தலைவர் மீதே இவ்வாறு குற்றஞ்சுமத்தப்படுகிறது. எனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற ரீதியில் இந்த செயற்பாட்டை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எரிபொருள் கொள்வனவு செய்ய நிதியில்லை என்று கூறுபவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே பேச வேண்டும்.

மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் இவ்வாறு செயற்படுவது பொறுத்தமற்றது. 5000 ரூபா கொடுப்பனவில் ஒரு மாதம் முழுவதுமான தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியுமா ? இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக அரசியல் விளையாட்டொன்றிற்கு இவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் அரசியல் முரண்பாடுகளே தற்போது வெளிப்பட்டுள்ளன. பொருளாதார பிரச்சினைகளே அரசியல் முரண்பாடுகளாகியுள்ளன. இந்த அரசியல் முரண்பாடுகள் எதிர்காலத்தில் எவ்வாறு தொடரும் என்று தெரியாது. கொவிட் தொற்றின் காரணமாக மாத்திரமே மக்கள் வீதிகளில் இறங்காமலுள்ளனர். எதிர்வரும் காலங்களில் எவ்வாறான நிலைமை ஏற்படும் என கூறுவது கடினம்.

உதய கம்மன்பில கூறியதைப் போன்று அரசாங்கத்திற்குள்ளேயே அதனை சீரழிப்பதற்கான எதிரிகள் உள்ளனர் என்பது உண்மை. ஆனால் இதன் ஊடாக அவர் சுதந்திர கட்சியை சாடவில்லை. காரணம் எமக்கும் அரசாங்கத்துடன் அதிருப்தியே காணப்படுகிறது. கூட்டணி ரீதியாக எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படுவதில்லை. சுதந்திர கட்சிக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. நாம் கூறும் விடயங்களை அவர்கள் கேட்பதும் இல்லை. எனவே தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மேலும் தீவிரமடையக் கூடும் என்றார்.