தொழிலாளர்கள் பொறுமை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும்

1624768162 radha 2
1624768162 radha 2

பெருந்தோட்ட கம்பனிகள் சர்வாதிகார போக்கை நிறுத்தாவிட்டால் தொழிலாளர்கள் பொறுமை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று பெருந்தோட்டங்களில் ஒவ்வொரு நாளும் பெருந்தோட்ட கம்பனிகளினது நிர்வாகம் முகாமைத்துவமும் சர்வாதிகார போக்குடனேயே நடந்து கொள்கின்றார்கள்.

இது ஒரு நல்ல சூழ்நிலை அல்ல. எந்த நேரத்திலும் தொழிலாளர்கள் தங்களுடைய பொறுமையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே இதனை உடனடியாக பெருந்தோட்ட கம்பனிகள் முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று தினந்தோறும் பல சிக்கல்களை நிர்வாகத்தின் மூலமாக சந்தித்து வருகின்றார்கள். இதனை அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் கண்டு கொள்வதில்லை.

நாங்கள் எதிர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் தெளிவாக விடயங்களை தெரிவித்து வருகின்றோம்.

ஆனால் ஆளும் கட்சியுடன் இணைந்திருக்கின்ற அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயங்கள் தொடர்பாக எங்கேயும் குரல் கொடுப்பதில்லை. அரசாங்கத்திற்கு ஒரு அலுத்தம் கொடுப்பதில்லை. அப்படியானால் அரசாங்கமும் பெருந்தோட்ட கம்பனிகளும் செய்கின்ற சர்வாதிகாரத்தை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்களா? என்ற கேள்வி எனக்கு எழுகின்றது.

20வது திருத்த சட்டத்திற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளித்த பொழுது அதற்கு காரணமாக கூறியது நாங்கள் மக்கள் நலன் கருதியே வாக்களித்தோம் என்று. ஆனால் இன்று அந்த மக்கள் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி தனது உரையில் பெருந்தோட்டங்கள் மூலமாக அதிக அந்நிய செலவாணி கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றார். ஆனால் அந்த மக்கள் இன்று எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை அவரால் பெற்றுத்தர முடியவில்லை.

ஆகக் குறைந்ததது இந்த கொரோனா காலத்தில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்ற எங்களுடைய தொழிலாளர்களுக்கு ஒரு நன்றியை கூட அவரால் கூற முடியவில்லை.

இதனை நினைத்து நாங்கள் வேதனைப்படுகின்றோம். எனவே அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றவர்கள் இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்திற்கு அலுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்.

இல்லாவிட்டால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி எங்களுடன் இணைந்து தொழிலாளர்களுக்காக போராட முன் வர வேண்டும். மறந்து விடாதீர்கள். இந்த பதவியையும் அந்தஸ்தையும் நமக்கு கொடுத்தவர்கள் இந்த பெருந்தோட்ட மக்களே தவிர அரசாங்கம் அல்ல. என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.