அரசாங்கம் தமிழர்களை துண்டாக்கிவிட்டு சிங்களவர்களை நியமிப்பதாக குற்றச்சாட்டு-எஸ். சிறிதரன்

Untitled 1 4
Untitled 1 4

தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டுதுண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (24) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வடக்கு மாகாண சபைக்கான பொதுச் செயலாளராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சிங்க மொழி பேசும் ஒருவரை இந்த அரசாங்கம் நியமித்துள்ளது. இலங்கையின் மொழிச்சட்டத்தின் பிரகாரம் தமிழற்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாகாணத்தில் எந்த மொழி முதன்மை செலுத்துகின்றதோ, அந்த மொழியின் அடிப்படையில் தான் நியமனங்கள் இருக்க வேண்டும் என்கின்ற சட்ட ஏற்பாடுகள் இருக்கக்கூடியதாக இந்த அரசாங்கம் ஒரு புதிய செயலாளரை மிகவும் வேகமாக நியமனம் செய்திருக்கின்றது.

வடக்கு பொதுச் செயலாளராக 12 க்கு மேற்பட்டவர்கள் தகுதியுடையவர்களாக இருந்தும் அவர்களைவிட தகுதி குறைந்த ஒருவரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாங்கள் இந்த நியமனத்திற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றோம்.

இது தொடர்பில் என்னென்ன விடயங்களை கையாள முடியுமோ அதனை செய்வோம். கடந்த காலத்தில் முட்டுக்கொடுக்கின்றோம் என்ற பேச்சுக்குள்வாங்கப்பட்டவர்கள். ஆனாலும் அநத காலங்களில் தொல்பொருள் அடையாளங்களை கிண்டுதல், அல்லது காணிகளை பறித்தல், இவ்வாறு சிங்களவர்களை நியமனம் செய்கின்ற விடயங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவோம்.

இவர்களது காலத்தில் நடைபெறுகின்ற இந்த விடயத்திற்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். அது தொடர்பாக தமிழ் மக்கள் இனியும் விழிப்படைய வேண்டிய காலம். தமிழ் மக்கள் ஒற்றுமையில்லாத சக்தியாக உள்ள நிலையை பயன்படுத்தி அரசாங்கம் தமிழர்களை துண்டுதுண்டாக்கிவிட்டு இப்பொழுது சிங்களவர்களை வட பகுதியிலும் கொண்டுவந்து நியமனம் செய்யுமளவிற்கு முன்னேறியிருக்கின்றது.

இது மக்களிடம் இருக்கின்ற ஒற்றுமையின் பலவீனம் என்பதையே வெளிப்படையாக காட்டி நிற்கின்றது.

மாகாணத்தின் பிரதம செயலாளராக சிங்கள இனத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் குற்றம் சாட்டுகின்ற நீங்கள், நல்லாட்சி அரசின் காலத்தில் மன்னார் மற்றம் வவுனியா மாவட்டங்களில் சிங்கள அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்த உயரிய பதவி வழங்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் என்ற கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது,

மன்னார் மாவட்டத்தில் நீண்ட போராட்டத்துக்கு மத்தியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை மாற்றி தமிழ் அரசாங்க அதிபரை நியமனம் செய்திருந்தோம். அதனை எங்களால் நீக்க முடிந்தது. வவுனியாவில் நாங்கள் கொடுத்த பல அழுத்தங்களின் மத்தியில் ஒருமுறை மாற்றத்திற்கான தயார்நிலை வருகின்றபொழுது இருந்த அதிகாரிகளிற்கிடையில் காணப்பட்ட போட்டியின் காரணமாக ஒருவர் நியமிக்கப்பட்டார்.

நியமிக்கப்பட்ட பிற்பாடு, அரசியல் சூழிநிலை காரணமாக குறிப்பாக மைத்திரி, ரணில் ஆகியோருக்கு இடையிலான ஒற்றுமை சீர் குலைந்து காலங்களிலே மாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பின்னர் இந்த அரசாங்கம் வந்த பின்னரும் புதிய சிங்களவரையே நியமனம் செய்தது என அவர் குறிப்பிட்டார்.