கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறமிருக்க யாழில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடக்கிறது – கஜேந்திரன்

thumb large fafafa
thumb large fafafa

கொரோனாவின் வெறியாட்டம் ஒரு புறம் நடக்கும்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் வெறியாட்டமும் நடப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ( 17)  இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று தற்காலிக ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே  இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வெறியாட்டம் பயங்கரமாக இடம்பெறுகின்றது.

மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். அதேவேளை வடக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள பொன்னாலை என்ற கிராமத்தில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 2 மணியளவில் இராணுவத்தினர் நுழைந்து ஆண் ,பெண் ,வயது வேறுபாடின்றி கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இது ஒரு இராணுவ வெறியாட்டம். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதேவேளை கொரோனா உக்கிரமடைந்துள்ள நிலையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பிணைகளிலாவது விடுவிக்குமாறு  கோருகின்றோம். 

கொரோனா தொற்று காரணமாக அவர்களை உறவினர்கள் சென்று பார்க்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

அவர்களை அவர்களின் சொந்த மாவட்ட சிறைகளுக்கு மாற்றவும் மறுப்பு தெரிவிக்கப்படுகிறது. இதனால் கைதிகளும் அவர்களின் உறவினர்களும் உள  ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு பிணை வழங்குங்கள்.

அடுத்ததாக, இலங்கைக்கு ஒட்சிசன் கொண்டு வருவதற்காக கப்பல் ஒன்று இந்தியா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. 

இதேவேளை யாழ் வைத்தியசாலையில் ஒட்சிசன் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்க வேண்டுமென கோருகின்றேன். 

கொரோனா விடயத்தில் இராணுவத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சுகாதார துறையினருக்கு கொடுங்கள். கொரோனா தடுப்பு செயலணியை தொடர்ந்தும் இராணுவம் வைத்திருக்குமேயானால்  கொரோனாவை ஒருபோதுமே ஒழிக்க முடியாது. அமைச்சர்களை மாற்றினாலும்  பயன் ஏற்படாது.

இதேவேளை கொரோனா உடல்களை எரிக்க  யாழ்ப்பாணத்தில் ஒரு இடமே  உள்ளது. அங்கும் ஒரு நாளைக்கு 3 உடல்களை மட்டுமே  எரிக்க முடியும். அதனை 4 ஆக்க  முயற்சிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் யாழ் வைத்தியசாலையில் 10 உடல்கள் வரை தேங்கியுள்ளன . அவற்றை எரிக்க வவுனியாவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இது மிகவும் சிரமமானது. மத ரீதியான சடங்குகளை செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும் எனவே அந்தந்த மாவட்டங்களிலேயே எரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் .அத்துடன் கொரோனா உடல்களை விறகுகள் மூலமும் எரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.