உள்நாட்டில் நீதி கிடைக்காததால் மக்கள் சர்வதேசத்தை நாடுகின்றனர் – ஜே.வி.பி

JVP
JVP

நாட்டுக்குள் நீதி, நியாயம் கிடைக்காததால் இலங்கையர்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்குச் எடுத்துச் செல்கின்றனர் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்காமை காரணமாகவே சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படாமை கத்தோலிக்க மக்களின் பிரச்சினை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் பிரச்சினையாகும்.

ஐ.நா. பொதுச்சபையில் ஜனாதிபதி கோட்டாபய ‘இலங்கையில் பயங்கரவாத வன்முறைகள் மீண்டும் இடம்பெற இடமளிக்கமாட்டோம்’ என்ற உத்தரவாதத்தை வழங்கியமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

ஆனால், சரியாக விசாரணைகளை மேற்கொண்டு பலியானவர்களுக்கு நீதியை நிலைநாட்டினால் மாத்திரமே மீண்டும் இத்தகைய சம்பவம் இடம்பெறுவதைத் தடுக்க முடியும் என்றார்.