சிறைக்கைதிகளை அமைச்சர் முழந்தாளிடச் செய்தது எதேச்சதிகாரமாகும் – சிறிதரன்

Ale Sri
Ale Sri

கடந்த 12ஆம் திகதி அனுராதபுர சிறைச்சாலைக்குள் தனது நண்பர்களுடன் மதுபோதையில் நுழைந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட்டு அமரச் செய்ததோடு, சுட்டுக்கொல்வேனென கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டிய செயற்பாடு, இந்த அரசாங்கத்தின் எதேச்சதிகாரத்தனத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் செயலாகவே அமைந்துள்ளது. சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கொழும்பிலிருந்து அனுராதபுரத்துக்கு ஹெலிகொப்டரில் பயணித்து தனது நண்பர் குழாமுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்ததோடு, அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை மிலேச்சத்தனமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளமை கடும் கண்டனத்திற்குரிய
செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இச்செயற்பாடானது, இந்த நாட்டின் சட்டம், நீதி, இன நல்லிணக்கம் என்பவற்றைக் கேள்விக்குட்படுத்துவதோடு, கடந்த காலங்களில் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் அப்பாவித் தமிழர்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனஅழிப்புச் சம்பவங்களை மீள நினைவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது.

1983ஆம் ஆண்டு கொழும்பின் உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையான வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள், சக சிங்களக் கைதிகளால் குத்தியும் வெட்டியும் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 2000.10.25ஆம் திகதியன்று மத்திய மாகாணத்தின் பிந்துனுவெவ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 27 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் காடையர் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டனர். 2012.07.04ஆம் திகதி வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளான நிமலரூபன், டில்றுக்சன் ஆகிய இரு தமிழ் அரசியல் கைதிகளும் சிறைச்சாலைப் காவல்துறையினராலும் இராணுவத்தினராலும் அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

2012ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலத்திலேயே வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் 25 கைதிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இப்படுகொலைகள் அனைத்தும் திட்டமிட்ட வகையிலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கைச் சிறைச்சாலைகளின் வரலாற்றில் சிறைச்சாலை அதிகாரிகளினாலும் அவர்களின் அனுசரணையுடனும் ஏராளமான படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. அதிலும் குறிப்பாக, தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதிமன்றக் கட்டளைகளின்றியே கோரமான மரண தண்டனைகள் சக சிங்களக் கைதிகளாலும் காடையர் குழுக்களாலும் சிறைச்சாலை அதிகாரிகளாலும் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன. ஆனால், இதுவரை எந்தவொரு படுகொலைக்குமான நீதி கிடைக்கப்பெறவுமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவுமில்லை.

இவ்வாறான சிறைச்சாலைப் படுகொலைகள் அனைத்தும் தமிழ் அரசியல் கைதிகளை இலக்குவைத்து தொடர்ச்சியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தே தமிழ் அரசியல் கைதிகளிடம் மிக மோசமான அதிகாரத் தொனியோடு இனவாதத்தைக் கக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளமை தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தியுள்ளது. சிங்களவர்களோடு நல்லிணக்கத்தை வளர்க்கும் செயற்பாடுகளில் தமிழர் தரப்பு இதயசுத்தியோடு ஈடுபடவேண்டுமென வலியுறுத்தி வரும் சர்வதேசம், நல்லிணக்கத்தை அடியோடு ஆட்டம்காண வைக்கும் இத்தகைய இன வன்முறைகள் குறித்தும் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும்.

அதிகாரத்தனம்மிக்க இச்சம்பவத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலை விடயதானத்திற்குரிய அமைச்சுப் பொறுப்பை மட்டும் தானாகவே துறந்து, ஐ.நா.வினதும் ஏனைய தரப்புக்களினதும் அழுத்தங்களைக் குறைப்பதற்குரிய கபடத் திட்டமொன்றைச் செயற்படுத்தியுள்ளார். இது அவருக்கான தண்டனை அல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பேணவேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டிருந்தால், இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த இராஜாங்க அமைச்சரை அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்கி முறையான நீதியை நிலைநாட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, இந்த நாட்டிலே ஒரு சாதாரண மனிதன் கைத்துப்பாக்கியோடு அல்லது வெடிகுண்டோடு இருந்திருந்தால் அவன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டிருப்பான். ஆனால், இந்த நாட்டினுடைய இராஜாங்க அமைச்சர் ஒருவர் கைத்துப்பாக்கியோடு சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை முழந்தாளிடவைத்து, அவர்களைநோக்கி துப்பாக்கியை ஆயத்தப்படுத்தி , தன்னுடைய சப்பாத்துக்களை நக்குமாறு கேட்டு அச்சுறுத்திக் கொலை முயற்சியிலும் ஈடுபட்டிருக்கின்றார். துப்பாக்கியோடு சென்றவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்! ஏன், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை? இது இந்த நாட்டினுடைய நீதியா? குறிப்பாக, 1985ஆம் ஆண்டு கிளிநொச்சியிலுள்ள புகையிரத நிலையத்துக்கு முன்னால் பயணஞ்செய்வதற்காகக் காத்திருந்த பயணிகளில் பத்துக்கும் மேற்பட்டவர்களை கிளிநொச்சி இராணுவ முகாமைச் சோ்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். அந்த இராணுவ வீரர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அப்பொழுது சொன்னார்கள். அன்று லொஹான் ரத்வத்தே ஒரு கைதியைச் சுட்டிருந்தால், இன்று இந்த அரசாங்கம் இவரும் மனநோயினால் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லியிருக்குமா? மனநோயினால் பாதிக்கப்பட்ட நிலையில்தான் லொஹான் ரத்வத்தே அந்தச் சிறைச்சாலைக்குச் சென்றாரா? தயவுசெய்து முதலிலே இதை உணருங்கள்!

இவ்வளவும் இந்த நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றபொழுது, ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையிலே நாளை உரையாற்றவிருக்கின்றார். ஏற்கெனவே அவர் அங்கு சென்றிருக்கின்றார். நேற்றைய தினம் அவர் ஐக்கிய நாடுகள் சபையினுடைய பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் அவர்களைச் சந்தித்துக் கதைத்திருக்கின்றார். காணாமற் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவதாக அவர் அங்கே சொல்லியிருக்கின்றார்.

இந்த நாட்டிலே காணாமலாக்கப்பட்டவர்கள் என்றால், அவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள்தான். 2008, 2009ஆம் ஆண்டுகளில் வடக்கிலே குறிப்பாக, யாழ்ப்பாணம் தவிர்ந்த வடமராட்சி கிழக்கு, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகியஇடங்களிலிருந்த மக்கள் கலைக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் வரை கொண்டுசெல்லப்பட்டார்கள். இவ்வாறு 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தார்கள். அவர்களில் பலர் தங்களுடைய பிள்ளைகளை, கணவன்மார்களை, தங்களுடைய தாய், தந்தையர்களைக் கண்கண்ட சாட்சியத்துடன் ஓமந்தையில் வைத்து ஒப்படைத்தார்கள். அப்படி ஓமந்தையிலே ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குவதுதான் இந்த நாட்டினுடைய அதியுத்தம ஜனாதிபதியினுடைய கடமையா? அப்படியென்றால், இந்த நாட்டிலே கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் கொலை செய்யப்பட்டுவிட்டார்களா? இல்லையென்றால், அவர்களுக்கு என்ன நடந்தது?

அறுபதுக்கும் மேற்பட்ட அப்பாக்களும் அம்மாக்களும் தங்களுடைய பிள்ளைகள் வருவார்கள் என்ற ஏக்கத்தோடும் வேதனையோடும் இறந்திருக்கின்றார்கள். இதனைவிட, தங்களுடைய பிள்ளைகளின் வருகைக்காக, தங்களுடைய உறவுகளின் வருகைக்காக, தங்களுடைய குடும்பத்தினரின் வருகைக்காக ஆயிரக்கணக்கான தாய், தந்தையர்கள் இன்றும் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இந்த நாட்டினுடைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினுடைய அண்ணனான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், இந்த நாட்டிலே நீதியை நிலை நாட்டுவதாகவும் பொறுப்புக் கூறுவதாகவும் அப்போதிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் அவர்களுக்குச் சொல்லியிருந்தார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, இந்த அரசு மிக மோசமான நிலையிலே இந்த மக்களை பிழையான வழியிலே கொண்டுசெல்ல முயல்கின்றது. நாங்கள் இன்று நடுத்தெருவில் விடப்பட்டிருக்கின்றோம். குறிப்பாக, 2008ஆம் ஆண்டு கிளிநொச்சியிலே இந்த மக்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு முன்னால் சென்று, “நீங்கள் போகவேண்டாம்” என்று கைகளைக் கூப்பி கண்ணீர் விட்டு அழுதார்கள். “நீங்கள் போனால் எங்களை இந்த இலங்கை அரசாங்கம் படுகொலை செய்யும். தயவுசெய்து போகாதீர்கள்” என்று கேட்டார்கள். இந்த விடயத்தை இந்தச் சபையினூடாக தற்போதைய ஐக்கிய நாடுகள் சபையினுடைய பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் அவர்களிடம் நான் விநயமாக முன்வைக்கின்றேன். அப்பொழுது பான் கி மூன் அவர்களிடம் எங்களுடைய மக்கள் கண்ணீரோடு கேட்டார்கள், “போகாதீர்கள்! போகாதீர்கள்! எங்களைக் காப்பாற்றுங்கள்!” என்று. எங்களை நடுத்தெருவிலே விட்டுச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையினுடைய ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களும் பொறுப்புச் சொல்ல வேண்டும்.

சர்வதேச நிறுவனங்களை வலுக்கட்டாயமாக இந்த அரசு அனுப்பியது. நீங்களும் எங்களை நடுத்தெருவில் விட்டுச் சென்றீர்கள். தங்களுக்குச் சர்வதேச ரீதியான, வெளிப்படையான நீதி, விசாரணை வேண்டும் என்று அதனால்தான் இன்று இந்த மண்ணிலே அந்த மக்கள் கேட்கின்றார்கள். ஆகவே, என்ன நடந்தது என்பதை ஆராயவேண்டும். நாங்கள் இங்கு அநாதைகளாகக் கொல்லப்பட்டோம்.

பாதுகாப்பு வலயங்களுக்குச் செல்லுங்கள்! அங்கே நில்லுங்கள்! என்று அரசாங்கம் அறிவித்தபொழுது, அங்கு சென்ற எங்களுடைய மக்கள் ‘பராஜ்’ குண்டுகளாலும் கொத்தணிக் குண்டுகளாலும் பொஸ்பரஸ் குண்டுகளாலும் படுகொலை செய்யப்பட்டார்கள், இன அழிப்புச் செய்யப்பட்டார்கள்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, உலகப் பந்திலே 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகம் வெட்கித் தலைகுனியக்கூடிய அளவுக்கு ஒரு பாரிய இனப்படுகொலை இந்த இலங்கை மண்ணிலே குறிப்பாக, வடக்கில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது. இதனை உலகம் ஏற்றுக்கொள்கின்றது. அவ்வாறான ஒரு சூழலில், ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடுகூட மாறிவிடுமோ என்ற ஓர் அச்சம் எங்களுக்குண்டு. தலைவர்கள் வருகின்றபொழுது அவர்கள் தருகின்ற ஒவ்வோர் உறுதிமொழிகளையும் நாங்கள் நம்புகின்றோம்.

அந்தத் தலைவர்களின் உறுதி மொழிகளால் ஏதோ நடக்கும் என்று நினைக்கின்றோம். ஆனால், எதுவும் நடப்பதில்லை. இந்த நாடு ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடு, இந்த நாடு நீதியான நாடு என்று நீங்கள் சொல்கின்றீர்கள். அப்படியென்றால், இந்த நாட்டிலே என்ன நடந்திருக்கின்றது?
ஜனாதிபதி சொல்கின்றார், நாங்கள் அந்த மக்களுக்கு கொடுத்திருக்கின்றோம் என்று இழந்துபோன உயிர்களுக்கு, வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீடுதானா நீதி? அதுதானா விடை? அதுதானா இந்த நாட்டினுடைய நீதி? சர்வதேச சமூகமே, ஆப்கானிஸ்தானிலே மக்கள் கதறியழுகிறபொழுது விமானம் அனுப்பி அந்த மக்களை நீங்கள் ஏற்றி வருகின்றீர்கள். சர்வதேச ஊடகங்கள் அதனை வெளியிலே கொண்டுவருகின்றன. ஆனால், நாங்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டபொழுது சர்வதேச சமூகம் மௌனம் காத்தது. எங்களுக்கு யாரும் விமானம் அனுப்பவில்லை எங்களுக்கு யாரும் கப்பல் அனுப்பவில்லை. நாங்கள் இலங்கை இராணுத்தாலும் இலங்கைப் படைகளாலும் படுகொலை செய்யப்பட்டோம். அப்பொழுது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்தான் இவ்வளவு விடயங்களுக்கும் தலைமை வகித்தார். ஆகவே, சர்வதேச சமூகம் ஒரு நேத்தியான வழியிலே சிந்திக்க வேண்டும். அது எங்கள் மக்களுக்கானதாக இருக்கவேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்! ஏங்களுடைய மக்கள் கொல்லப்பட்ட பிற்பாடு, உள்ளக விசாரணை செய்வதாக நீங்கள் சொல்கின்றீர்கள். இங்கே விசாரிப்பதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டுமென்று நீங்கள் கேட்கின்றீர்கள். நான் இங்கு ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகின்றேன். சுட்டவர்கள் நீங்கள், பொஸ்பரஸ் குண்டுகளை வீசிக் கொலை செய்தவர்கள் நீங்கள், கொத்தணிக் குண்டுகளை வீசிக் கொன்றவர்கள் நீங்கள், நான்கு இலட்சம் மக்கள் இருக்கும்போது 70,000 போ்தான் இருக்கின்றார்கள் என்று சொல்லி உணவு அனுப்பியவர்கள் நீங்கள்! பட்டினியால் கொல்லப்பட்டவர்கள் நாங்கள்! குழந்தைகள் கஞ்சிக்காக வரிசையில் நின்றபொழுது கொல்லப்பட்டார்கள். கொலைகள் அனைத்தையும் செய்தவர்கள் நீங்கள்! நீங்களே அதனை விசாரிப்பதென்றால், அது என்ன நியாயம்? கொலையாளியே தான் செய்த கொலைகளை விசாரிப்பதுதான் இந்த உலகத்திலே நீதியா? நாங்கள் இந்த நீதியைக் கேட்கவில்லை.

நாங்கள் கேட்பது, சுயாதீனமான, நியாயமான, அந்த மக்கள் நம்பக்கூடிய வகையிலான, இங்கு நடந்த கொலைகளை நிரூபிக்கக்கூடிய வகையிலான நோ்த்தியான ஒரு விசாரணையைத்தான். அந்த விசாரணை சர்வதேச விசாரணையாக இருக்கவேண்டும், எங்கள் மக்கள் நம்பக்கூடியதாக இருக்கவேண்டும். யார் பாதிக்கப்பட்டார்களோ, யார் யுத்தத்திலே அழிக்கப்பட்டார்களோ, யார் யுத்தத்தால் முழுமையாகப் பாதிக்கப்பட்டார்களோ, சொத்துக்கள் அழிக்கப்பட்டு எந்த மக்கள் தெருவுக்கு வந்தார்களோ அவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கவேண்டும். அதனால், நீங்கள் விசாரிப்பதல்ல விசாரணை! இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் அவர்களுக்குச் சொல்வதுபோல, இங்கே உள்ளக விசாரணையை மேற்கொள்வது ஒரு நீதியான விசாரணையாக அமையாது. அழிக்கப்பட்ட எங்களுடைய சொத்துக்களால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீளமுடியாமல் இன்றும் நாங்கள் திணறிக்கொண்டிருக்கின்றோம்.

இந்தச் சூழலில், வலிந்து காணாமலாக்கப்பட்ட எங்கள் மக்கள் தொடர்பில், இன்றும் அரசியற் கைதிகளாக இருக்கின்ற எங்கள் உறவுகள் தொடர்பில் எங்களுக்கு ஒரு சர்வதேச விசாரணை தேவை. இங்கு ஓர் இன அழிப்பு நடைபெற்றது என்பதை மிகத் தெளிவாகச் சொல்கின்ற ஒரு விசாரணையாக அது இருக்கவேண்டும் என்பதைத்தான் நான் இந்த இடத்தில் வலியுறுத்துகின்றேன்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, நான் இன்னுமொரு விடயத்தை இந்த இடத்திலே குறிப்பிடுகின்றேன். அண்மையிலே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் சிதம்பரநாதன் இளங்குன்றன் அவர்கள் யாழ்ப்பாணத்திலே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். அந்தக் கொலை தற்கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மாதா கோவில் வீதி, துன்னாலை வடக்கு, கரவட்டியைச் சோ்ந்த அவருடைய சகோதரர் ஜெகதீஸ்வரன் எனக்களித்த கடிதத்தை நான் இந்த இடத்திலே வாசிக்கின்றேன்.

“எனது சகோதரன் சிதம்பரநாதன் இளங்குன்றன் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் மூன்றாம் வருட மாணவனாகக் கல்வி கற்று வந்த நிலையில் கடந்த 2020.11.17 அன்று அவர் கோண்டாவில் கிழக்கிலுள்ள வன்னியசிங்கம் வீதியில் வாடகைக்குத் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த வீட்டின் அறையில் கொலை செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார். இக்கொலையானது வெளிநாட்டிலுள்ளவர்களால் இங்குள்ள வன்முறைக் குழுக்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் இதனை மூடிமறைத்துத் தற்கொலை எனக் காட்டுவதற்கு முயல்வதுடன், இது சம்பந்தமான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இது கொலை என்பதற்கு ஆதாரமாக 2020.11.17 அன்று பிற்பகல் 1.00 மணிக்குக் கதவு திறக்கப்பட்டபொழுதுதான் அவர் இறந்தமை தெரியவந்தது என வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியுள்ளார். ஆனால், 2020.11.17 அன்று முற்பகல் 10.30 மணிக்கு சுவிஸ் நாட்டிலிருந்து இயக்கப்படும் ஒரு சமூக வலைத்தளத்தில் சமூகச் செய்தியாக இது வெளியாகியுள்ளது. அதாவது, துன்னாலை வடக்குப் பகுதியைச் சோ்ந்த யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவர் கோண்டாவில் வன்னியசிங்கம் வீதியில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்த நிலையில் தவறான
முடிவெடுத்துத் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கொலையாளர்களூடாக இந்தச் செய்தி சென்றுள்ளது. ஐயா, இந்தக் கொலை பற்றிய விபரத்தினைப் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுசென்று, நாடாளுமன்றின்மூலம் முறையான விசாரணை மேற்கொள்வதற்கு நீங்கள் உதவவேண்டும்” என்று கேட்கின்றார்.

கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே, இதுவொரு கொலை! இது தொடர்பான விசாரணையை பிரதமர் அலுவலகம் முன்னெடுத்திருப்பதாக அறிகிறோம். தயவுசெய்து இந்தக் கொலை தொடர்பில் நீதி கிடைக்கவேண்டும். அந்தக் குடும்பம் ஏங்கிக்கொண்டிருக்கின்றது. இறந்தவருடைய சகோதரன் தெருத்தெருவாக அலைந்து திரிகின்றான் பலரிடம் கடிதம் எழுதிக் கேட்கின்றான். ஒரு மருத்துவபீட மாணவனை இழந்த அந்தக் குடும்பம் எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருக்கும். அந்த ஏழைக் குடும்பத்தினரின் கண்ணீருக்கு இந்த உயர்ந்த சபையினூடாக நீதி கிடைக்க வழி
செய்யுங்கள் என்று கூறி, நிறைவு செய்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.