கட்டுப்பாடுகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

thani
thani

கொவிட் பரவல் காரணமாக கடந்த 41 நாட்களாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று(01) அதிகாலை 4 மணியுடன் கட்டுப்பாடுகளுடன் நீக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நாட்டில் அமுலாக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், பின்னர் கட்டம் கட்டமாக நீடிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை நீக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் அடங்கிய புதிய சுகாதார வழிகாட்டல்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது.

எனவே அதனடிப்படையில் பொதுமக்கள் தமது தேவைகளை முன்னெடுக்க முடியுமெனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.