ஆட்சியைத் தக்கவைக்க ராஜபக்ச அரசு முயற்சி! – ஜே.வி.பி. குற்றச்சாட்டு

jvp
jvp

ராஜபக்ச அரசு தேர்தல் முறைமை மாற்றங்களின் ஊடாக ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனாதிபதி, மூன்றில் இரண்டு மற்றும் 20 ஆவது திருத்தம் என அனைத்து அதிகாரங்களும் கிடைத்துள்ள நிலையிலும், ஆட்சியாளர்கள் மக்களுக்காக எதனையும் செய்யவில்லை.

அரசு தேர்தல் முறைமை மற்றும் புதிய அரசமைப்பு தொடர்பில் கதைத்தாலும் இப்போது மக்கள் கேட்பது அவற்றையல்ல.

தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் அரசுக்கு எதிராக அணிதிரள்கின்றனர்.

இதனால் தேர்தல் முறைமையில் மாற்றங்களைச் செய்து, ஏதேனும் ஒரு விளையாட்டை விளையாடி ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியுமா? என்றே அரசு சிந்திக்கின்றது” – என்றார்.