ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றுக – அரசிடம் எதிரணி கோரிக்கை

456 3
456 3

“அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கான தீர்வுத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது:-

“அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் 24 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்தன. எனினும், 2015 இல் ஆட்சிக்கு வந்த எமது அரசு, குழுவொன்றை அமைத்தது. அதிபர், ஆசிரியர்களுக்கு ஒரே தடவையில் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டிருந்தது.

எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்த முடிவை தற்போதைய அரசு நிறுத்தியது. தற்போது அதே திட்டத்தை இரண்டு தடவைகளில் செயற்படுத்துவதற்கு முற்படுகின்றது. இந்த அரசை நம்பமுடியாது. இன்று மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உள ரீதியிலான தாக்கங்களும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உரிய தீர்வை ஒரே தடவையில் வழங்க வேண்டும். அதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, ஜனவரி முதல் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும்” – என்றார்.