அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய மாட்டோம் – ஆசிரியர் சங்கம்

thumb mahindha
thumb mahindha

அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.

முரண்பாடான யோசனைகளை மாத்திரம் அரசாங்கம் முன்வைக்கிறது.எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைக்கு செல்வது குறித்த இறுதி தீர்மானம் திங்கட்கிழமை (18) அறிவிக்கப்படும் என  இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர்-அதிபர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைக்கு செல்வது குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினர் முன்வைத்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது.

சர்வாதிகாரமான முறையில் போராட்டத்தை முடக்கி வெற்றிப் பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

அரசியல்வாதிகள் கருத்துக்கள் வெறும் ஊடகப்பிரசாரமாக காணப்படுகிறது. இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலை கருத்திற் கொண்டு அரசியல்வாதிகள் மாணவர்களின் நலன்விரும்பிகள் போல் கருத்துரைத்துக் கொள்கிறார்கள்.

நிகழ்நிலை முறைமை ஊடாக ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுப்படும் போது எதிர்க் கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண இவர்கள் நாடாளுமன்றில் உரையாற்றவில்லை.

ஆகவே அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம்.பெற்றோர்கள் என குறிப்பிட்டுக் கொண்டு தற்போது அரசியல்வாதிகளை சந்திப்பவர்களின் அரசியல் பின்னணியை நன்கு அறிவோம். ஆகவே அரசாங்கம் குறுக்கு வழியில் எமது போராட்டத்தை முடக்க முயற்சிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு –செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறதே தவிர நம்பிக்கை கொள்ளும் வகையில் உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் ஊடாக அறிவிக்கவில்லை. அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கை கிடையாது.

எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைக்கு ஆசிரியர் மற்றும் அதிபர் செல்வது குறித்து இன்று தீர்மானிக்கப்படும். பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் முறையான திட்டம் ஏதும் கிடையாது. முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றார்.