வடபகுதி மீனவர்கள் தங்களுடைய தொழிலை சரியாக செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள்- அன்ரனி ஜேசுதாசன்

IMG 20211011 WA0003
IMG 20211011 WA0003

வடபகுதி மீனவர்கள் இன்றும் தங்களுடைய தொழிலை சரியாக செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள் என மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினுடைய சமாதான மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடலின் தேசிய இணைப்பாளரும், வடகிழக்கு பிராந்தியங்களிற்கான இணைப்பாளருமான அன்ரனி ஜேசுதாசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை, இந்திய மீனவர்களுடைய தற்போதைய நிலைமைகள் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையிலான இந்த முரண்பாட்டினை தொடர்ச்சியாக நாங்கள் பார்க்கின்றோம். இந்திய மீனவர்களால் கடந்த 20 வருடமாக இப் பிரச்சினை இருக்கிறது. இந்திய மீனவர்கள் இழுவை மடியுடன் வந்து இலங்கை கடற்பரப்பிலே தொழில் செய்வது ஒரு முக்கிய முரண்பாடாக இருந்து வருகின்றது.

ஒரு சில நேரங்களிலே, இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்பிற்குள்ளே சென்று மீன்பிடியிலே ஈடுபடுகின்றதும் ஒரு முரண்பாடாக இருந்து வருகின்றது. ஆனால் இந்த காலகட்டத்தில் பார்க்கின்ற போது விஷேடமாக இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்குள்ளே செல்வது மிகவும் குறைவான நிலையிலே, இந்திய மீனவர்கள் இழுவை மடியுடன் வட பகுதியிலே குறிப்பாக முப்பது வருட கால யுத்தத்திலே பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் இன்றும் கூட தங்களுடைய தொழிலை சரியாக செய்ய முடியாத நிலையிலே இந்திய இழுவை மடிகள் வந்து கரையோர பிரதேசங்களிலே குறிப்பாக கடந்த இரண்டு மாதமாக இந்த பிரச்சினை மிகவும் வலுப்பெற்றதாக இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தினுடைய வடமராட்சி, வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு பிரதேசங்களிலே வந்து இவர்கள் இழுவை மடிகளை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதனால் விஷேடமாக கடலுக்கு அடியே இருக்கும் தாவரங்கள், மீன்குஞ்சுகள் இல்லாமல் போவதோடு மீனவர்களுடைய வலைகளும் அறுக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக இந்த பிரச்சினை இடம்பெற்று வருகின்றது. இதற்கு சில முயற்சிகளை நாங்கள் 2004 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தோம். இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையேயான பிரச்சினை தொடர்பாக இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்து ஒரு கலந்துரையாடலை 2004 ஆம் ஆண்டு மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் யுத்த காலத்தில் வடபகுதியிலே மீனவர்கள் தொழிலில் ஈடுபடாததன் காரணத்தினாலே யுத்தம் முடிவடைய வடபகுதி மீனவர்கள் தொழிலில் ஈடுபட முயற்சித்த போது இந்திய மீனவர்களுடைய இழுவைமடி வருகை பாரதூரமான பிரச்சனையாக இருந்தபடியினாலே, 2010 ஆண்டு இலங்கையில் இருந்து 22 பேர் கொண்ட ஒரு குழுவை இந்தியாவிற்கு அழைத்து சென்று பல மாவட்டங்களிற்கு விஜயங்களை மேற்கொண்டு கடற்தொழிலுடைய இலங்கை, இந்தியாவை சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். கலந்துரையாடலை மேற்கொண்டு இறுதியிலே சென்னையில் வைத்து ஒரு உடன்படிக்கையை தயாரித்து இலங்கை, இந்திய கடற்தொழில் சம்பந்தமான உயரதிகாரிகளுக்கும் கையளித்திருந்தோம்.

ஆனால் இரு நாட்டு அரசுகளும் அதனை நடைமுறைப்படுத்தாமல் இலங்கை அரசாங்கம் கூறியது இது அரசசார்பற்ற நிறுவனங்கள் செய்கின்ற செயற்பாடு என்று கூற முடியாது இது இராஜதந்திரமாக தீர்க்கப்பட வேண்டும் என்று, அதன் பின்னர் 2013, 2016 காலப்பகுதியில் மீண்டும் மீனவர்களிற்கிடையே கலந்துரையாடலை மேற்கொண்டு சில தீர்வுகளை எடுத்ததாக கூறிய போதும் இதற்கு இதுவரையிலும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை.

தற்போது இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த முறைப்பாட்டை தீர்ப்பதற்கு இலங்கைக்குள்ளே இரண்டு சட்டங்கள் இருக்கின்றன. ஒன்று 2017 ஆம் ஆண்டு இலக்கம் 11 அதில் இழுவை மடிகளிற்கு எதிரான சட்டம், 2018 இலக்கம் 1 வெளிநாட்டு படகுகளை கண்காணிப்பதற்கான சட்டம் இந்த இரண்டு சட்டங்களையும் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி எல்லை தாண்டி வருகின்ற மீன்பிடி தொழிலை நிறுத்த வேண்டும் என்று கூற வேண்டும்.

குறிப்பாக இந்திய பக்கமாக நாங்கள் பார்க்கின்ற போது அவர்கள் செய்கின்ற தொழில் முறையானது சட்டவிரோத தொழில் முறையாக இழுவைமடியை பாவித்து முழுமையான வளங்களை அழிப்பதோடு மீனவர்களினுடைய உபகரணங்களையும் அழிக்கின்றபடியினாலே இந்த நிலைமை நிறுத்தப்பட வேண்டும்.

அதற்கு பின்னர் வேண்டுமாயின் சாதாரண மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றவர்களிற்கு இடையிலே அது சார்ந்த பாரம்பரிய மீன்பிடி தொழிலிலே ஈடுபடுகின்றவர்களில் அது தொடர்பான ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்