யாசகர்கள் பிரச்சினையைத் தீர்க்க உரிய வேலைத்திட்டம் தேவை – கோபா குழுக் கூட்டத்தில் வலியுறுத்து

2 1
2 1

சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இருப்பதன் அவசியம் தொடர்பில் அரச கணக்குகள் பற்றிய (கோபா) குழுவில் அவதானம் செலுத்தப்பட்டது.

சமூக சேவைகள் திணைக்களத்தின் தற்போதைய நிலைமைகளை ஆராயும் நோக்கில் கோபா குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

அமைச்சுக்களின் விடயப்பரப்புகளை தயாரிக்கும் போது தரப்படுத்தல் காணப்படுவது அவசியம் என்று இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

அங்கவீன குழந்தைகளுக்காக சேவைகளை மேற்கொள்வதற்கு மாவட்ட ரீதியில் நிறுவனங்களை ஸ்தாபிப்பதன் தேவையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளித்தல், அவர்களுக்குப் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் சமூகமயப்படுத்தல் செயற்பாடுகளை ஒரு நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தும் தேவையையும் குழு சுட்டிக்காட்டியது.

நீண்ட காலமாக சமூக சேவைகள் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை விரைவாகப் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

சமூக சேவைகள் திணைக்களம், மாகாண சமூக சேவைகள் திணைக்களத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுவது முக்கியமானது எனவும் குழு உறுப்பினர்கள் இங்கு தெரிவித்தனர்.

யாசகர்கள் அதிகரிப்பது ஒரு தேசிய பிரச்சினை எனவும், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய வேலைத்திட்டம் தேவை எனவும் குழுவின் கருத்தாக இருந்தது. அதனைத் தீர்ப்பதற்கான கூட்டு வேலைத்திட்டத்தின் அவசியம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.