வவுனியாவில் அனர்த்த ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது – இன்பராஜன்

IMG20211110104917 01
IMG20211110104917 01

வவுனியா மாவட்டத்தில் எந்தவிதமான அனர்த்தங்கள் ஏற்படின் அதனை சமாளிப்பதற்கு மாவட்ட செயலகமும் அனர்த்த முகாமைத்துவ பிரிவும் தயார் நிலையில் இருப்பதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் அனர்த்த முன் எச்சரிக்கை நிலைமை தொடர்பாக மாவட்டசெயலக வளாகத்தில் இன்று அவசர கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..

வவுனியா மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய அனர்த்த முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பான அவசரகால கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

மாவட்டத்தில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் இடம்பெற்றால் அதிலிருந்து மக்களை எவ்வாறு பாதுகாப்பது. அது தொடர்பான தந்திரோபாயங்களை வகுப்பது தொடர்பாக இன்று விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அந்தவகையில் அவ்வாறான அனர்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை இராணுவத்தினரின் உதவியுடன் நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்தகால அனர்த்த நிலைமைகளுடன் ஒப்பிட்டு பார்க்கின்றபோது வெங்கல செட்டிகுளம் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளின் சில பகுதிகள் வெகுவாக பாதிப்படையக்கூடிய நிலையில் இருக்கின்றது. காரணம் அந்த பிரதேசங்களின் பூகோள அமைவிடம் மற்றும் வறுமைநிலை என்பன அதில் செல்வாக்கு செலுத்துகின்றது.

மல்வத்துஓயா பெருக்கெடுப்பதன் விளைவாக மன்னாரின் சில பகுதிகள் மற்றும் அதன் எல்லைப்பகுதியான வெங்கலசெட்டிகுளம் பிரதேசத்தின் சில பகுதிகள் பாதிப்படையக்கூடிய தன்மை இருக்கின்றது. அதேபோல நெடுங்கேணியில் மருதோடை, காஞ்சூரமோட்டை ஆகிய பகுதிகள் வெகுவாக பாதிப்படையக்கூடிய தன்மை இருக்கின்றது. அத்துடன் வவுனியா பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள பேராறு நீர்த்தேக்கமானது தற்போது வழிந்தோடும் தன்மையில் இருக்கின்றது. மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் அதன் வான் கதவுகள் திறக்கப்பட வேண்டிய நிலமை ஏற்படலாம். இதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் பாவற்குளமானது தனது முழுகொள்ளளவை எட்டும்போது அதனை அண்டிய பகுதிகளும் பாதிப்படையக்கூடிய நிலமை இருக்கின்றது. எனவே அப்பிரதேசங்களை சேர்ந்த மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.