இந்த அரசாங்கத்தால் தான் இனப்படுகொலைக்கு உள்ளானோம்- முன்னாள் போராளி அரவிந்தன்

21 618e34ba2f3e0
21 618e34ba2f3e0

இந்த அரசாங்கத்தால் தான் இனப்படுகொலைக்கு உள்ளானோம் ஆகவே இந்த அரசாங்கத்திடமே எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு தீர்வைத் தர வேண்டும் என்று கேட்கின்றோம் என முன்னாள் போராளி அரவிந்தன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து முன்னாள் போராளிகள் அனைவர் சார்பாகவும் மாவட்ட ரீதியாக ஒவ்வொருவராக நாங்கள் தென் இலங்கையிலே உள்ள அரசியல் தலைவர்கள், மற்றும் முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான ஒரு பயணத்தை நேற்று (11) மேற்கொண்டிருந்தோம்.

அந்த சந்தர்ப்பத்திலே, போராளிகளுடைய அன்றாட தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள், அடக்குமுறைகள், விசாரணைகள், தொடர்ந்து வரும் வழக்குகள், அரசியல் கைதிகளுடைய பிரச்சினை, காணாமல் போனவர்களுடைய பிரச்சினை, காணி அபகரிப்பு, தொல்வருள் திணைக்களத்தினுடைய ஆக்கிரமிப்பு, மற்றும் பெண் போராளிகளுடைய, அதிமுக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக பேசி இருந்தோம்.

மிக முக்கியமாக எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி, அனுஷ்டிக்கப்பட இருக்கின்ற மாவீரர் தினம் தொடர்பாக பேசி இருந்தோம். காரணம் எங்களுக்கு மாவீரர் தினம் தொடர்பிலே, விதிக்கப்படுகின்ற தடைகள், நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பாக அவர்களுக்கு சுட்டிக்காட்டிய விடயம், இலங்கையிலே இரண்டு தரப்புகள் யுத்தத்திலே ஈடுபட்டிருந்த நிலையிலே ஒரு தரப்பை அவர்கள் ஒதுக்கி விட்டிருக்க கூடியதாக தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன.

இங்கே இறந்தவர்களை நினைவு கூருவது என்பது விடுதலைப் புலிகள் என்பது அறவே இல்லாத நிலையிலே, விடுதலைப் புலிகளில் இருந்த தங்களுடைய குடும்ப உறவுகளை நினைவு கூருகின்ற ஒரு நிகழ்வே நடைபெற்று வருகின்றது. ஆகவே அவர்களை புதைத்த இடத்திலே நாங்கள் வழிபாடுகளை செய்வதற்கு எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடல்களை நாங்கள் செய்திருந்தோம்.

ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திப்பதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். எங்களுக்கான நேரங்களை எடுத்துக் கொள்ள முடியாத, ஒரு நிலைமை காணப்பட்டது.

ஒவ்வொரு நாளும், நாங்கள் நினைவஞ்சலிகளை செய்வது அல்லது கடையடைப்பு என்று கூறினால் எங்களுக்கு 365 நாளும் போதாத ஒரு நிலைமை காணப்படும். ஒரு நாளை நாங்கள் மாவீரர் தினத்திலே போரிலே ஈடுபட்டு இறந்த போராளிகளை நினைவு கூருவதற்கும், முள்ளிவாய்க்கால் 18 னை ஒட்டுமொத்த பொதுமக்களுக்குமான நினைவேந்தலுக்கான நிகழ்வாக, நாங்கள் அனுசரிக்கிறோம். அதை அனுமதிக்க வேண்டும்.

நாங்கள் சந்தித்து கதைத்த போது முன்னாள் போராளிகளுக்கு அவர்கள் முன்னுரிமை அடிப்படையிலே உதவிகளை வழங்குவதற்கு விரும்புவதாக, தெரிவித்திருந்தனர்.

இங்கே சில விடயங்களிலே ஜனாதிபதி கூறுவது போன்று மரண சான்றிதழ் பத்திரங்களை வழங்குவது என்பது, ஒருவருக்கு இருக்கக்கூடிய நோயை அறியாது அவருக்கு மருந்தை வைத்தியர் கொடுப்பதற்கு சமமானது.

தமிழ் மக்களுக்கான தீர்வை, இந்த அரசாங்கத்தால் தான் இனப்படுகொலைக்கு உள்ளானோம். இந்த அரசாங்கத்திடமே நாங்கள் கேட்கின்றோம். எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு ஒரு தீர்வைத் தர கேட்கின்றோம் என தெரிவித்தார்