போதைக்கு அடிமையாகும் பெண்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை – அலிசப்ரி

1626678129 Ali Sabry 2
1626678129 Ali Sabry 2

போதைப்பொருளுக்கு அடிமையாகிவரும் பெண்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக புதிய மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் போதைக்கு அடிமையாகி சிறைச்சாலையில் இருப்பவர்களை புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பும் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கின்றோம் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் காரியாலயத்தில் தற்போது இடம்பெற்றுவரும் நடவடிக்கை மற்றும் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பவர்களால் சமூகம் பாரிய அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கின்றது. அதனால் அவ்வாறானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

போதைக்கு அடிமையாகி இருப்பவர்களை சிறைப்படுத்தி வைப்பதற்கு பதிலாக அவர்களை முறையாக புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் பாவனையில் இருந்து பாதுகாத்துக்கொள்வதாக இருந்தால் இதுதொடர்பில் சமூகத்தை பரந்தளவில் அறிவுறுத்தவேண்டும்.

அத்துடன் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் காரியாலயத்தினால் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருக்கும் நபர்களை புனர்வாழ்வளித்து, அவர்களை சமூகத்துக்கு பயன் தரும்வகையில் உருவாக்கி சமூத்துடன் இணைக்கும் செயல் வரவேற்கத்தக்கது.

அவர்கள் புனவர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தொடர்பில் தேடிப்பார்க்கும் நடவடிக்கையை சரியாக மேற்கொள்ளவேண்டும்.

மேலும் போதைக்கு அடிமையாகியவர்களை சிறைப்படுத்துவதன் மூலம் அவர்களை இந்த நிலைமையில் இருந்து மீட்பது கடினமான செயல். அதனால் எதிர்காலத்தில் இவ்வாறானவர்களை புனர்வாழ்வளிக்க அனுப்பும் எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கின்றோம்.

புதிய புனர்வாழ்வு மத்திய நிலையங்களை அமைப்பதன் மூலம் அடுத்துவரும் வருடங்களுக்குள் புனர்வாழ்வளிக்க அனுப்புபவர்களின் எண்ணிக்கையை முறையே 8000வரை அதிகரிக்க இருக்கின்றோம். 

அத்துடன் போதைக்கு அடிமையாகி இருக்கும் பெண்களை புனர்வாழ்வளிப்பதற்காக கவனம் செலுத்தி இருக்கின்றாேம். எதிர்வரும் காலத்தில் புதிய மத்திய நிலையங்களை அமைக்கும்போது இதற்காகவும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றார்.