மாவீரர் நாள் நிகழ்வுகள் நடந்தே தீரும் – சுவீகரன் நிசாந்தன்

WhatsApp Image 2021 11 20 at 13.32.55 1
WhatsApp Image 2021 11 20 at 13.32.55 1

மாவீரர் கல்லறைகள் உன்னதமானது அதைவிட மகத்தானது தமிழர்களின் எழுச்சிமிகு உணர்வுகள். எனவே ஆகுதியான மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் உணர்வுபூர்வமாக சுடரேற்றி நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிசாந்தன் இன்று திங்கட்கிழமை (22) திகதி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

எம் இனத்தின் விடுதலைக்கான உன்னதமான எழுச்சிமிகு போராட்டம் மௌனிக்கப்பட்டு பன்னிரெண்டு ஆண்டுகளைக் கடந்த போதும் துயிலும் இல்லங்களில் இருக்கும் போராட்ட காலங்களில் ஆகுதியான மாவீரர்களின் கல்லறைகளை அதே பன்னிரெண்டு வருடங்களாகவே இலங்கை இனவாத அரசு இடித்தொழிக்கும் செயற்பாடுகள் இன்னும் நிறைவுக்கு வரவில்லை என்பதை மன்னார் ஆட்காட்டி துயிலும் இல்லத்தின் உடைப்பு வெளிப்படையாகவே எடுத்துக்காட்டுகின்றது. இதனை தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை வன்மையான கண்டிக்கின்றது.

இலங்கை இராணுவத்தினதும், அரச, இராணுவ புலனாய்வாளர்களதும் மிலேட்சத்தனமான செயற்பாடாக தொடர்வது ஏற்கனவே இடித்தொழித்த துயிலுமில்ல கல்லறைகளின் சிறு பாகங்களை கூட ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக உடைத்தெறியும் செயற்பாடுகள் ஒரு புறமாகவும்.

ஸ்ரீலங்கா பேரினவாத அரசே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் தமிழர்களாகிய நாம் எம் மரணித்த மாவீரர்களின் நினைவுகளை இப்பொழுது மட்டுமல்ல இந்த உலகில் மானிடம் உள்ளவரை பல தலைமுறை தாண்டியும் நினைவிற்கொள்வோம். ஆகவே நீங்கள் இடித்தொழிக்க வேண்டியது துயிலும் இல்லங்களை அல்ல உலகத் தமிழர்களின் இதயங்களையும், உணர்வுகளையுமே முடிந்தால் அதை செய்யுங்கள் அப்பொழுது தமக்கான உரிமையை கேட்டு போராடிய ஒரு இனத்தை அழித்த சிங்கள அரக்கர்களாக புத்தரின் வரலாறு இந்த உலகில் மாற்றமடையட்டும்.

தமிழர்களாகிய நாம் இந்த நாட்டில் பல தசாப்த காலங்களாக சிங்கள பேரினவாதிகளான நீங்கள் எங்கள் மீது புரிந்த அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும், ஆள்கடத்தல்களையும் படுகொலைகளையும் எம் கண்முன்னே பார்த்து இவற்றையேல்லாம் கடந்துதான் இன்றும் வாழ்ந்து வருகின்றோம்.

ஆகவே உங்களுக்கு வேண்டுமேன்றால் ஒவ்வொரு ஆட்சியும், ஆட்சியாளர்களும் மாறும் போது இது புது புது விடயங்களாக தென்படலாம் ஆனால் எங்களுக்கு இவ் விடயங்கள் அனைத்தும் பழகிய ஒன்றுதான் எனவே தமிழர்களாகிய நாம் எக்காலத்திலும் இவற்றைக் கண்டு அஞ்சப்போவதில்லை.

ஆகவே வழமை போன்று மாவீரர் நினைவு நாளில் ஆகுதியான மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் தாயகம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள துயிலும் இல்லங்களிலும், பொது இடங்களிலும், வீடுகளிலும் உணர்வுபூர்வமாக சுடரேற்றி நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் இதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.