இனவாதத்தைத் தூண்டுகின்றது அரசு! – சஜித் குற்றச்சாட்டு

491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1
491628a0 7713ca54 sajith 850x460 acf cropped 1

நாட்டின் பொருளாதாரத்தை கட்டயெழுப்ப வேண்டுமாயின் நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டியது அவசியம் என்றும், ஆனால் அரசாங்கமோ பிரச்சினைகளை மூடி மறைப்பதற்காக இனவாதத்தைத் தூண்டுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அதன்போது மேலும் கூறுகையில்,

“கொவிட் தொற்று நிலைமைக்கு பின்னர் நாட்டில் வறுமை நிலைமை உருவாகியுள்ளது. அரசாங்கத்தின் திட்டமிடப்படாத பொருளாதார முகாமைத்துவமே இந்த புதிய வறுமைக்கு காரணமாகியுள்ளது. வருமான ரீதியான வறுமை, உணர்வுரீதியான வறுமை, நாட்டில் பெரும்பாலானவர்கள் மந்த போசன நிலை உருவாகி அதனால் ஏற்பட்டுள்ள வறுமை நிலை ஆகியன தற்போது தேசிய பிரச்னையாகி உள்ளன.

எமது அரசாங்கத்தின் காலத்தில் உலக வங்கியானது ஜனசவிய திட்டத்திற்கு மட்டுமே நிதி வழங்கியது. இத்தகைய வேறு எந்த திட்டங்களுக்கும் அந்த வங்கி நிதி வழங்கியதில்லை. அந்தளவு அந்த திட்டம் மிக சிறப்பான வறுமை ஒழிப்புக்கான  திட்டமாக இருந்தது.

இதேவேளை, பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. நாட்டின் வருமானம் குறைவடைந்துள்ளது. வருமானத்தை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை. அடுத்த வருடத்துக்கு மொத்தமாக 6721 மில்லியன் டொலர் கடன் செலுத்தவேண்டி இருக்கின்றது. அடுத்துவரும் ஒன்றரை மாதத்துக்கே அந்நிய செலாவணி இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் எவ்வாறு முகம்கொடுப்பது. மக்கள் தாக்க முடியாத பொருளாதார பிரச்னைக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு. மக்கள் பொருட்களைப்  பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்க வேண்டிய நிலை. இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நிலையான தீர்மானத்துக்கு வரவேண்டும்.

அதனால் அரசாங்கம் தொடர்ந்தும் தடுமாறிக்கொண்டிருக்காமல் விரைவாக எடுக்கவேண்டிய தீர்மானங்களுக்கு செல்லவேண்டும். அதற்காக சர்வதேச நாணய நிதியங்களுடன் கலந்துரையாடவேண்டும். அதன்போது எமது தனித்துவத்தை பாதுகாத்துக்கொள்ளவேண்டும். எமது கடன்களை மீள் கட்டமைப்பு செய்யவேண்டும். அதற்காக நாங்களும் உதவ தயாராக இருக்கின்றோம்.

நாட்டுக்கு வருமானத்தை  ஈட்டிக்கொடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதனால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை. அதனால் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வரவு – செலவு திட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும்.

எவ்வாறாயினும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டயெழுப்ப நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனால், ஒரே நாடு – ஒரே சட்டத்தை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் நாட்டில் இருக்கும் பிரச்னைகளை மறைப்பதற்கு இனங்களுக்களுக்கிடையில் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றது.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான செயலணியை அமைத்து ஒரு சமூகத்தை முற்றாக புறக்கணித்திருக்கின்றது. நாட்டுக்குள் பாரிய அழிவை ஏற்படுத்தவா அரசு முயற்சிக்கின்றது? இனங்களுக்கிடையில் பிரச்னையை ஏற்படுத்திக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது” – என்றார்.