கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்க கூடாது – உதயரூபன்

20211124 085256
20211124 085256

இங்கு கல்வி அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக அரசியற் செயற்பாடுகளை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சுற்றுநிரூபத்திற்கு உடன்பட்டு செயற்பட வேண்டுமே தவிர அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்க கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவடடச் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடாபில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் கிண்ணியாவில் நடைபெற்ற படகு விபத்தில் மாணவர்கள் உட்பட ஆசியர் ஒருவரும் பலியானதையிட்டு எமது ஆசிரியர் சங்கம் சார்பில் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு இந்தச் சம்பவத்திற்கு இந்த அரசு முழுமையான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நீர்வழிப் பயணங்களை மாணவர்கள் மேற்கொள்ளும் பொது இந்தப் பாதையை சரியான முறையில் சீர் செய்து கொடுத்திருப்பின் அந்த மாணவர்கள் பாதுக்காப்பான முறையில் பயணத்தினை மேற்கொண்டிருக்கலாம். தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்ற இந்த சூழலில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கிருக்கும் பிரபல்யமான பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. சுபீட்சத்தின் நோக்கு என்று சொல்லி அபிவிருத்தியை நோக்கி இந்த நாடு சென்ற கொண்டிருக்கின்ற நேரத்தில் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கியே இந்த நாடு செல்ல வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சம்பவத்திற்கு நாம் ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் இந்த சம்பவத்திற்கு நீதியான விசாரணையொன்றை நடாத்தி இந்த மாணவர்களுக்குரிய நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகளுக்கு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.

இதே போன்று மட்டக்களப்பிலும் பல பிரதேசங்களில் மாணவர்கள் ஆசிரியர்கள் இவ்வாறான பயணத்தினூடாவே பாடசாலைகளுக்குச் செல்லுகின்றனர். எனவே நிலைபேறான அபிவிருத்தி விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்குரிய முழுப் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே இந்த கல்வி அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக அரசியற் செயற்பாடுகளை இங்கே நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இதனை விட்டு விட்டு மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கும் எமது கல்வி வலயங்களை முன்னேற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். கல்வி அபிவிருத்திக்காக கல்வி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் சுற்றுநிரூபத்திற்கு உடன்பட்டு செயற்பட வேண்டுமே தவிர அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்க கூடாது என்று தெரிவித்தார்.