8 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு : சீரற்ற காலநிலை தொடரும்

1600865054 landslide 2
1600865054 landslide 2

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அத்தோடு 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை செவ்வாய்க்கிழமை பகல் ஒரு மணிக்கு பின்னர் சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். 

இப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை நிலவும்போது கடல் சற்று கொந்தழிப்பாக காணப்படும் என்பதால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.