உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்படவில்லை – ரவூப்

262603589 4514859571885028 8945931248245982155 n 2
262603589 4514859571885028 8945931248245982155 n 2

அரசாங்கம் கல்வித்துறைக்கு ஒதுக்கி இருக்கும் நிதி பாடசாலைகளின் பெயர் பலகையை அமைப்பதற்கு கூட போதுமானதாக இல்லை.

அவ்வாறான நிலையில் கல்வி அமைச்சு எதிர்காலத்தில் முகம்கொடுக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்வது பாரிய சவாலாகும்.

அத்துடன் வெளிநாட்டு நிதி உதவிகளுடன் முன்னுக்கு கொண்டுசெல்லவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று காரணமாக எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிவரும் என்பதை நிதி அமைச்சர் இனம் கண்டு வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தாலும் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரேரணைகள் இல்லை. 

குறிப்பாக கல்வி அமைச்சை எடுத்துக்கொண்டால் , எந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற தெளிவு நிதி அமைச்சருக்கு இருக்கின்றதா என் கேள்வி எமக்கு எழுகின்றது. 

பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கக்கூடிய இந்த அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி எந்தவகையிலும் போதுமானதாக இல்லை. 

ஆரம்ப பிரிவில் இருந்து இடைநிலை கல்வி  வரைக்கு வெளிநாட்டு நிதியில் இருந்து அரைவாசி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. உயர்கல்விக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 80 வீதம் வரை வெளிநாட்டு உதவிகள் மூலம் கிடைக்கும் நிதியாகும்.

இதனை பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியுடன் ஒப்பிட்டு பார்க்கையில், அதற்கு முழுமையாக உள்நாட்டு நிதியே ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், அரச செலவில் கூடிய தொகையை கிராம தேர்தல் தொகுதிகளின் அடிப்படை தேவைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை போன்ற நாட்டுக்கு, அடிப்படை தேவைகளுக்கு அதிக நிதி ஒதுக்கி பொருளாதார பிரச்சினையில் இருந்து மீளமுடியாது. 

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முறையான வேலைத்திட்டம் இல்லை. கல்வி அமைச்சுக்கு ஒதுக்கி இருக்கும் நிதி மூலம் சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாது.

வெளிநாட்டு மாணவர்களை நாட்டுக்கு அழைத்து கட்டணம் அறவிடும் கல்வி நிறுவனங்களிடமிருந்து நிதி திரட்டும் கடந்தகால வேலைத்திட்டத்தை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றது. கல்வி துறைமூலம் வருமானம் தேடிக்கொள்ளவே முயற்சிக்கப்பட்டிருக்கின்றது.

கல்வித்துறைக்கு தேசிய வருமானத்தில் 6வீதம் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டாலும் எந்த காலத்திலும் அவ்வாறு ஒதுக்கப்படுவதில்லை.

2.5வீதம் வரையே ஒதுக்கப்படுகின்றது. கொழும்பில் வீதி எங்கும் பட்டச்சான்றிதழ் வழங்கும் கல்வி கடைகளை நாங்கள் காண்கின்றோம். இந்த கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்தவேண்டும். 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இவற்றை கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். பட்டக்கல்வி சான்றிதழ் வழங்கும் பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து, அதன் நிர்வாகத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் ஒருவரை நியமித்து, ஏனைய உறுப்பினர்களாக இராணுவத்தினரை நியமித்து நடவடிக்கை எடுத்ததால் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டது. அதனால் அந்த திட்டத்தில் இருந்து அரசாங்கம் பின்வாங்கிக்கொண்டது.

மேலும் நாட்டில் இடம்பெற்ற இடர்கள் காரணமாக பல பாடசாலைகளின் கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த கட்டிடங்கள் பாவனைக்கு பொருத்தமில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் இந்த பாடசாலைகளின் கட்டிடங்களை புதுப்பிக்கவேண்டி இருக்கின்றது. 

அரசாங்கம் ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்க திட்டமிட்டிருக்கின்றது. ஆனால் கல்வி அமைச்சு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி பாடசாலைகளுக்கான பெயர் பலகைகளை அமைப்பதற்கே போதுமானது. அத்துடன் கொவிட் நிவாரணத்துக்கு மொத்த செலவில் இலங்கை அரசாங்கம் ஒதுக்கி இருப்பது 5 வீதமாகும். 

இவ்வாறான நிலையில் எப்படி எதிர்காலத்தில் கல்விதுறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்காணமுடியும் என கேட்கின்றேன் என்றார்.