மசகு எண்ணெய் பற்றாக்குறைக்கு பொறுப்பானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை

shutterstock 552038428
shutterstock 552038428

உரிய நேரத்தில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்து சுத்திகரிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாமல் போன அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்துமாறு இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பொது சேவையாளர் சங்கம் கோரியுள்ளது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் கனியவள கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் ஆகியோருக்கு கடிதமொன்றினை அனுப்பி அந்த சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் இன்மையால் மூடப்பட்ட நிலையில் அதில் பணியாற்றுபவர்களின் தொழில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பொது சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து நேற்று கிடைக்கப்பெற்ற 3,000 மெட்ரிக் தொன் டீசல் தொடர்ந்து போதுமானதாக உள்ளமையினால் மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படமாட்டாது இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் பேச்சாளருமான எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிகளவான மின்சார தேவை ஏற்படாவிடத்து எதிர்வரும் செவ்வாய்க் கிழமை வரை குறித்த எரிபொருள் போதுமானதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.