மனித புதைகுழி வழக்கில் ஆஜராக சட்டவாதிகளுக்கு அனுமதி; மேல்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

IMG 20220222 150405
IMG 20220222 150405

மன்னார் மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு வவுனியா மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கான அனுமதியினையும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மன்னார் மனிதப்புதைகுழி விடயம் தொடர்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் அவர்களால் வவுனியா மேல்திமன்றில் மீளாய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.  அதன் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
குறித்த தீர்ப்பின் பின்னர் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தபோது,
மன்னார் புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் 2018 ஆம் ஆண்டு முதல் இம்பெற்று வருகின்றது. அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மன்னார் நீதிமன்றமே மேற்பார்வை செய்து வந்தது. பின்னர் அங்கிருந்து பெறப்பட்ட மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடர்பான அறிக்கை ஒன்றும் தற்போது வந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த விடயத்தில் ஈடுபட்டிருந்த அரச சட்டவாதி பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் எந்த ஒரு சட்டத்தரணியும் நீதிமன்றில் ஆஜராக கூடாது என்ற வாதத்தை முன்னெடுத்திருந்தார். அதனை மன்னார் நீதாவன் ஏற்றுக்கொண்டு. சட்டத்தரணிகள் ஆஜராக முடியாது என்ற உத்தரவை வழங்கினார். இதனை எதிர்த்து வவுனியா மேல்நீதிமன்றில் மீளாய்வு வழக்கொன்றை நாம் ஏற்படுத்தினோம். அந்த வழக்கின் விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. 

அதன் பிரகாரம் எந்த ஒரு நீதிமன்றிலும் பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராவதற்கு உரிமை இருக்கிறது. இது அரசியல் சாசன ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட ஒரு உரிமை.எனவே இது சட்டத்திற்கு மீறிய செயல் என்ற வாதத்தை நாம் முன்வைத்திருந்தோம். எனினும் குறித்த செயற்பாடுகளை அது தொந்தரவு செய்யும் என அரச சட்டவாதி வாதங்களை முன்வைத்தார். இதனை ஆராய்ந்த மேல்நீதிமன்ற நீதிபதி எந்த நடவடக்கையிலும் பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் ஆஜராவதற்கு உரிமை இருக்கின்றது என்று உத்தரவிட்டு மன்னார் நீதவானின் உத்தரவினை தள்ளுபடி செய்தார்.

 இந்த தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிக்கும் பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் ஒரு மயில் கல்லாக இருக்கின்றது. அத்துடன் காணாமல் போனவர்களின் அலுவலகமும் இந்த வழக்கில் இடையீடு செய்வதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுடன், புதைகுழி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மன்னார் நீதிவானின் மேற்பார்வையிலேயே நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. 

அத்துடன் காணாமல் போனோர் சார்பிலும், அந்த அலுவலகம் மற்றும் பாதிக்கப்பட்டோர் சார்பிலும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 நபர்கள் எந்த நேரத்திலும் அங்கு பிரசன்னமாகி அது தொடர்பான நடவடிக்கைகளை 30  மீற்றர் தொலைவில் இருந்துஅவதானிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

அத்துடன் முக்கியமாக ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு மணித்தியாலத்திலும் 10 நிமிடங்கள் அந்த இடத்திற்கு சென்று அந்த நடவடிக்கைகளை அவதானிப்பதற்கும் அது தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான விடயம் ஏனெனில் இந்த புதைகுழி சம்மந்தமான விடயம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். 

ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் அதனை பார்வையிட முடியாது என்று வலுக்கட்டயமாக இந்த செயற்பாடுகளை முன்னெடுத்த வைத்திய அதிகாரி உத்தரவொன்றினை வழங்கி பொதுமக்களையும் ஊடகவியலாளர்களையும் அப்புறப்படுத்தினார். எனவே இத்தகைய வழக்கின் மூலம் ஊடகவியலாளர்கள் தமது செய்திகளை வெளியிடுவதற்கான சுதந்திரம் இந்த தீர்ப்பினால் வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இது தொடர்பாக எதாவது விண்ணப்பங்கள் செய்யவேண்டும் என்றால் அதனை மன்னார் நீதிவானுக்கு நேரடியாக சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு வழங்கபட்டுள்ளது.அத்துடன் அகழ்வுப்பணி் தொடர்பாக மன்னார் நீதிவானின் கட்டளையே இறுதியானதாகும். அத்துடன் நிதிவானின் நேரடி கண்காணிப்பில் பாதிக்கப்பட்ட மக்கள். அவர்கள் சார்பான சட்டத்தரணிகள், சட்டமா அதிபர் திணைக்களம், மருத்துவ நிபுணர்கள்,தொல்பொருள் திணைக்களம், ஆகியோர் இணைந்து கலந்துரையாடி எடுக்கும் முடிவு நீதவானால் அங்கிகரிக்கப்பட்டு அவரது நேரடி கண்காணிப்பில் அனைத்தும் இடம்பெற வேண்டும் என்ற கருத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாங்கள் ஒரு விடயத்தை மாத்திரம் முன்வைத்தே இந்த மீளாய்வு மனுவை செய்திருந்தோம். எனினும் இந்த தீர்ப்பின் மூலமாக ஜனநாயகத்திற்கும் மக்கள் ஆட்சிக்கும் சாதகமான பலவிடயங்கள் வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது. எனவே இன்றையதினம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேல்நீதிமன்றம் சிறப்பான ஒரு தீர்வினை அளித்திருக்கின்றது. இது மக்களின் உரிமைகளை மீண்டும் நிலைநாட்டும் என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன்.

இதேவேளை மன்னார் நீதவானின் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நாடகமாடுகின்றார்கள், இது ஒரு கற்பனாவாதிகளின் கற்பனை என்ற ரீதியில் அந்த உத்தரவு அமைந்திருந்தது. அதனை கண்ணுற்ற மேல்நீதிமன்ற நீதிபதி எந்த ஒரு நீதிமன்றத்தாலும் பாவிக்ககூடாத ஒரு வார்ததைகள் அல்லது மொழி என்று அதனை விமர்ச்சித்திருந்தார். என்பதனையும் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றேன் என்றார்.
இதேவேளை வவுனியா மேல்நிதிமன்ற நீதிபதியாக கடமையாற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த உத்தரவுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.