வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக இன்றையதினம் (15) நகரசபை மண்டபத்தில் திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

“வளம் மீட்டு நலம் பெறுவோம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் தடைகளை களைந்து வவுனியா மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கோடு திறந்த கலந்துரையாடலாக இடம்பெற்றிருந்தது.
வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தின் தலைவர் செ.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விவசாய நிலங்களை விடுவித்தல், தானிய உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் வவுனியா மாவட்டத்தின் தானிய உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், நீண்ட காலமாக ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் காணப்படும் விவசாய காணிகளுக்கான ஆவணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷார்ட் பதியுதீன், கு.திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உபதவிசாளர் குமாரசாமி, வவுனியா செட்டிகுளம் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ,வர்த்தக சங்கத்தினர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்