தனிவழிக்கு தயாரில்லை-ராஜித

rajitha 1
rajitha 1

“தனிமையில் போய் அரசுடன் இணையும் திட்டம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை” – என்று கூறியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன.

அரசுடன் இணைவது தொடர்பில் அவரிடம் வினவிய போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2015இல் மஹிந்தவை விட்டு வந்து மைத்திரியை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் இறங்கிய போது ஐக்கிய தேசியக் கட்சி 22 வீதமான வாக்குகளுடன் மாத்திரம் இருந்தது. ஒன்றரை மாதங்களில் 52 வீதமாக அதை அதிகரித்தோம்.

தனிமையில் போய் அரசுடன் இணையும் திட்டம் இல்லை; அதற்கான தேவையும் இல்லை. என்னைப் போல் நினைக்கும் ஆட்கள் எதிர்க்கட்சிகளில் உள்ளனர்.

நான் இந்த நிலைப்பாட்டை முன்வைத்ததும் அவர்கள் என்னுடன் இப்போது இது பற்றிப் பேசுகின்றார்கள். அவர்கள் நல்ல பெயர்களை வைத்திருப்பவர்கள். இது பற்றி நான் ரணிலுடன் பேசவில்லை.

நாட்டை முன்னேற்றும் வடிவம் பற்றி ரணிலுடன் பேசி இருக்கிறேன். ஒரு தடவை நிதி நிலைமை பற்றி விசாரித்தேன். பரவாயில்லை பல இடங்களில் இருந்து நிதி வரும் என்றார் ரணில்.

அவருடன் பேசி போராட்டக்காரர்களை கைது செய்வதை நிறுத்தினேன். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் கொண்டவரப்பட்டனர்.

அவரும் நானும் ஜனநாயகத்துக்காக மனித உரிமைகளுக்காகப் போராடியவர்கள். நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையையும் தேர்தல் முறைமையையும் நான் அன்றிலிருந்து வெறுக்கின்றேன்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசை பாரமேற்றுச் செய்யாவிட்டால் அடுத்த போராட்டம் வெடிக்கும். மீண்டும் வீடுகளை எரிப்பார்கள். அடுத்தது நாங்கள் இயலாதவர்கள் என்று முத்திரை குத்தப்படுவோம்” – என்றார்.