இலங்கையில் தமிழர்கள் போரினால் வலிந்து காணாமல்போகச் செய்யப்பட்ட விடயம் தொடர்பிலும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விடயத்திலும் இலங்கை அரசு இரட்டைக்கொள்கையை வெளியிட்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இந்தக் குற்றச்சாட்டைச் சபையில் இன்று முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச விசாரணை கோரப்படும்போது, இலங்கை அரசு, நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு தொடர்பில் நம்பிக்கைக்குரிய விடயத்தைத் தெரிவித்து வருகின்றது.
இலங்கையின் நீதித்துறை மூலம் இந்த விடயத்தைக் கையாள முடியும் என்ற நிலையில் சர்வதேச நீதிமன்றம் இதற்கு அவசியமில்லை என்று அரசு கூறி வருகின்றது.
எனினும், இலங்கையின் கடற்பரப்பில் பாரிய சேதத்தை விளைவித்த எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விடயத்தில், வழக்கை சிங்கப்பூர் நீதிமன்றில் நடத்துவதற்கு இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
இதிலிருந்து ஏதோ ஒன்றை இலங்கை அரசு மறைக்க முயல்கின்றது என்றே சந்தேகம் கொள்ளவேண்டியுள்ளது.” – என்றார்.
சாணக்கியன் எம்.பியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச, எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனமும் வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ள நிலையில், அதற்கு எதிராக இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்புக்குள் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
எனவேதான் குறித்த கப்பல் நிறுவனம் பதிவுசெய்யப்பட்டுள்ள சிங்கப்பூரில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கப்பல் நிறுவனத்தின் காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து இலங்கை கோரியுள்ள நட்டஈட்டைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அடிப்படையிலேயே சிங்கப்பூரில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ மேலும் குறிப்பிட்டார்.