ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

121598967 727599721445786 3576311287245592201 n 1
121598967 727599721445786 3576311287245592201 n 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான ச.தவசீலன்,க.குமணன் ஆகிய இருவரும் தொடர்சியாக இடம்பெற்று வரும் மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற போது கடந்த (12.10.2020) அன்று மரக்கடத்தல் சம்பவங்களோடு தொடர்புடைய குழுவால் தாக்கப்பட்டிருந்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் முல்லைத்தீவு குற்றத்தடுப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16.10.2020 அன்று முதல் வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வழக்கு  இன்றைய நாளுக்கு (20) திகதியிடப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்ற  நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு சந்தேக நபர்களை  எதிர்வரும் பதின்நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது .  

ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் சந்தேக நபர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டதரணி அன்டன் புனிதநாயகம் தலைமையில் சட்டதரணிகளான கெங்காதரன் , சுதர்சன் , கணேஸ்வரன் ,நிம்சாத் ,ஜெமீல் உள்ளிட்ட ஏழு சட்டதரணிகள் மன்றில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர் .

குறிப்பாக இன்னும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யவேண்டி இருப்பதால் காவல் துறையினர் அந்த நபர்கள் தொடர்பில் விபரங்களை தந்தால் அவர்களை ஒப்படைக்க முடியும் எனவும் ஆனால் காவல் துறையினர் அந்த விபரங்களை தரவில்லை எனவும் ஏற்கனவே கைதான சந்தேக நபர்கள் கொரோனா காரணமாக மன்றிலே முற்படுத்த படாமல் தொடர்ந்தும் சிறையிலே இருப்பதாலும் அவர்களை தமது தரப்பால் சிறைக்கு சென்று பார்க்க முடியாத சூழல் இருப்பதால் மேலும் கைது செய்யப்பட வேண்டிய நபர்கள் தொடர்பில் விபரங்களை தம்மால் பெற முடியாமல் இருக்கிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் பிணை வழங்கி விடுவித்தால் கைது செய்யப்படவேண்டிய ஏனைய சந்தேக நபர்களை தம்மால் ஒப்படைக்க முடியும் என பிணை விண்ணப்பத்தினை முன்வைத்தனர்.

பாதிக்கபட்ட ஊடகவியலார்கள் சார்பில் சட்டத்தரணி வி .எஸ் .எஸ் தனஞ்சயன் ,ருஜிக்கா நித்தியானந்தராஜா ,துஷ்யந்தி சிவகுமார் , க .பார்த்தீபன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கபடுவதற்க்கு தமது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்ததோடு சந்தேக நபர்கள் தரப்பால் குறித்த ஊடகவியலாளர்களுக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் இருப்பதாக சுட்டிக்காட்டியதுடன் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நீதி கோரி தொடர்ந்தும் மக்கள் வெளியில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் . பாதிக்கபட்ட ஊடகவியலார்களுக்கு நீதி கோருகின்றார்கள் என தமது வாதங்களை முன்வைத்தனர்.

காவல் துறையினரின் தரப்பால் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்ய படவேண்டும் எனவும் ஏற்கனவே கைதான சந்தேக நபர்களில் ஒருவர் பல்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் நீதிமன்றால் எச்சரிக்கை செய்யப்பட்டும் தண்டிக்கபட்டும் விடுதலை செய்யப்பட்டவர் என்ற நிலையில் தொடர்ந்தும் குறித்த நபர் வெளியில் சென்று இவ்வாறான சம்பவங்களை தொடர்ந்தும் செய்து வருகின்றார். மேலும் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தில் வன திணைக்களத்தால் 42 தேக்கு மர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை தொடர்ந்து கௌரவ நீதாவன் வழங்கிய கட்டளையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து உத்தரவிட்டதோடு எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி அன்று வழக்கை ஒத்திவைத்தார்.

மேலும் காவல் துறையினரின் விசாரணையில் மன்றுக்கு திருப்தி இல்லாத காரணத்தால் காவல் துறையினர் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு விரிவான அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.