மருந்துகளை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம்!

Tablets 720x380 1
Tablets 720x380 1

அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தகங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு போதுமான மருந்துகள் இல்லாது காணப்படின் அவர்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நாளை முதல் (05) ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான மருந்துகளை வீடுகளுக்கே விநியோகிக்க தபால் திணைக்களத்துடன் இணைந்து மீண்டும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசெல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீடுகளுக்கே மருந்துகளை வழங்குவதற்காக நோயாளிகளின் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் அவசியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தனது சிகிச்சை சம்பந்தமான புத்தகத்தில் சரியான முகவரி வழங்கப்படாதிருந்தால் சம்பந்தப்பட்ட வைத்தியசாலையை தொடர்புகொண்டு சரியான தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு இவ்வாறான தகவல்களை வழங்க வேண்டுமாயின் குடும்ப நல உத்தியோகத்தர் அல்லது பிரதேச கிராம அலுவலகர் ஆகியோரின் உதவியைப் பெறலாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.