தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களை ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னரும் கண்காணிக்க வேண்டும்-ஜனாதிபதி

d513b49198
d513b49198

ஊரடங்கு சட்டத்தை நீக்கியதன் பின்னரும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையினை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுடையவர்களுடன் தொடர்புடைய 84 ஆயிரம் பேர் நாடளாவிய ரீதியில் 31 ஆயிரத்து 457வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

மேல் மாகணத்தில் 40 ஆயிரத்து 676 பேர் 13 ஆயிரத்து 911 வீடுகளில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ள நபர்களை ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னரும் கண்காணிக்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பு செயலணியின் முக்கிய கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூகத்திலிருந்து தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன் தேவையேற்படின் குறித்த பகுதிகளை முடக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் தோட்டங்கள் மற்றும் தொடர்மாடிக் குடியிருப்புக்களின் பாதுகாப்பு குறித்தும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் குறித்த பகுதிகளில் உரிய கண்காணிப்புடன் அடிக்கடி பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பழங்கள், மரக்கறி வகைகள் மற்றும் அத்தியவசியப் பொருட்களுடன் மாவட்ட எல்லைகள் தாண்டி பயணிக்கும் லொறிகளுக்கு அனுமதிப்பத்திரம் அவசியமில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.