மாவீரர் தினத்தை நினைவுகூரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – சரத் வீரசேகர

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த உறுப்பினர்களை நினைவுகூரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர சபையில் அரசிடம் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாடாளுமன்றத்தில் இருக்கும் சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்களவர்களுக்கு எதிராகத் தமிழ் மக்களைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அன்று தமிழ் இளைஞர்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதற்கு இவ்வாறான கருத்துக்களே காரணமாக அமைந்தன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்தநிலையில், நாட்டில் மீண்டும் பயங்கரவாத நிலைமை உருவாகுமாக இருந்தால் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு வரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே அதற்குப் பொறுப்பானவர்களாக இருப்பார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் (சுமந்திரன்) உயிரிழந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரை நினைவுகூர்ந்துள்ளார். இதனூடாக அவர் பிரிவினையை ஏற்றுக்கொள்கின்றார் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

இதற்கமைய தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூருபவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.