கொரோனா மரணம் ; உரிமை கோரப்படாத நிலையில் 12 உடல்கள்

Corona Death

கொரோனா வைரசினால் உயிரிழந்த 12 பேரின் உடல்கள் இன்னமும் உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களே உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுகின்றன என சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி உடல்களை தகனம் செய்யவேண்டும் என்பதால் அவற்றை பொறுப்பேற்பதற்கு குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இதன்காரணமாக எவரும் உரிமை கோராத உடல்கள் கொழும்பு பிரேத அறையில் காணப்படுகின்றன.

அரசாங்கம் நியமித்த நிபுணர்கள் குழுவொன்று கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது தகனம் செய்யவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

இரண்டு மாதகாலத்தின் பின்னர் நிலைமையை மீண்டும் ஆராய்ந்த பின்னர் நிபுணர்கள் குழு இறுதிமுடிவை எடுக்கவுள்ளது. கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சமீபத்தில் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.