மஹர சிறைச்சாலை சம்பவம் :இடைக்கால அறிக்கை நாளை சபைக்கு சமர்ப்பிக்கப்படும்-லொஹான் ரத்வத்தே

7292281dc2b7b07d1051a3f159166a22 XL

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நாளை சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் முகாமைத்து இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக நீதி அமைச்சர் சபைக்கு அறிவித்திருந்தார். அந்த குழுவின் அங்கத்தவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்

என்றாலும் குறித்த குழுவின் அங்கத்தவராக இருக்கக்கூடிய நீதித்துறையுடன் தொடர்புபட்ட உறுப்பினர், குறித்த விசாரணை தொடர்பான தனது நிலைப்பாட்டை ஊடக சந்திப்பொன்றில் பகிரங்கமாக தெரிவித்திருக்கின்றார். விசாரணை குழுவின் உறுப்பினர் ஒருவர் இவ்வாறு தனிப்பட்ட கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்னால் வந்து தெரிவிப்பதால் அந்த விசாரணையின் சுயாதீனத் தன்மையை எதிர்பார்க்க முடியுமா? விசாரணை பக்கச்சார்பின்றி இடம்பெறவேண்டும் என்றே நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சருக்கு கையளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த அறிக்கையில் இருக்கும் சில விடயங்களையே குறித்த அங்கத்தவர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். இடைக்கால விசாரணை அறிக்கை நாளை சபைக்கு நீதி அமைச்சரால் முன்வைக்கப்படும். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அதனை பார்த்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.