சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்ற அவசர கலந்துரையாடல்!

meeting
meeting

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கொரோனா பாதுகாப்பு மற்றும் டெங்குகொழிப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பிலான அவசர கலந்துரையாடல் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடைபெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி அகிலன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் அமானுல்லா, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் அகமட் நஸீல், மேற்பார்வை சுகாதார பரிசோதாகர் ஈ.ரீ.சலீம் மற்றும் பள்ளிவாயல்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று பொதுச் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டுள்ள அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்குட்பட்ட மக்களின் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள், தற்போதுள்ள நிலவரங்கள், பீ.சி.ஆர் மற்றும் ஆண்டிஜன் பரிசோதனை நடவடிக்கைகள் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பாக இக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டன.

கட்டாய தனிமைப்படுத்தலினால், தொடர்ந்தும் 13 நாட்களாக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில், விவசாயிகள் வயலுக்குச் சென்றுவருவதில் எதிர் நோக்கிவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு பாஸ் நடைமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று தொடர்பான அறிக்கைகள் ஓரளவு சாதகமாக அமைந்துள்ளமை நிம்மதியளிப்பதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி இதன் போது தெரிவித்தார்.

மேலும், பொது மக்களிடமிருந்து பீ.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கைகள் நாளாந்தம் இடம் பெற்றுவருவதாகவும் தெரிவித்த அவர், பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.