பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த நபர் கைது!

IMG a8b71130470ef5f47bed3f5b898be47a V 1
IMG a8b71130470ef5f47bed3f5b898be47a V 1

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களை நடத்திவிட்டு தலைமறைவாகியிருந்த சுமன் என்று அழைக்கப்படும் சந்தேக நபர் ஓமந்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு காவல்து​றையினரால் இந்தக் கைது நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி யாழ்ப்பாண பெருமாள் கோவிலடியில் வைத்து தனுரொக் என்ற மானிப்பாய் இளைஞனை வாளால் வெட்டி கொலை முயற்சி செய்தமை, நீர்வேலியில் உள்ள தனுரொக்கின் நண்பனின் வீடு புகுந்து இளைஞனையும் தாயாரையும் தாக்கியமை கச்சேரி ஊழியர் ஒருவரை வெட்டிக் காயப்படுத்தியமை உள்ளிட்ட பல வாள்வெட்டு வன்முறைகளுடன் பிரதான சந்தேக நபராக சுமன் யாழ்ப்பாண காவல்து​றையினரால் தேடப்பட்டு வந்தார்.

பணத்துக்காக வாள்வெட்டு வன்முறைகளில் தான் ஈடுபட்டதாக சந்தேக நபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரால் யாழ்ப்பாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்து​றையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத் தடுப்பு காவல்துறை பிரிவினரால் சந்தேக நபர் தேடப்பட்டு வந்த நிலையில் ஓமந்தையில் தலைமறைவாகியிருந்தமை தொலைபேசி உரையாடலின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று காலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார். அவர் நாளை யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.