சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி தப்பியோட்டம்

download 7 1
download 7 1

வெலிசறை மார்பு நோய் மருத்துவமனையில் இருந்து, கொரோனா நோயாளி ஒருவர், நேற்றுப் பிற்பகல் 3.30 அளவில் தப்பிச்சென்றுள்ளார்.

43 வயதுடைய நோயாளி ஒருவரே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

காச நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், மருதானை பிரதேசத்தின் போலியான முகவரி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருதானை பிரதேசத்தில் குறித்த முகவரியில் அவ்வாறான நபர் ஒருவர் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த நபர் கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

அவர், அதிகளவில் போதைப்பொருளை பயன்படுத்தும் நபர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த நபரை கண்டுபிடிப்பதற்காக, ஏனைய காவல்துறையின் ஒத்துழைப்புடன், மாபாகே காவல்துறையினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவரின் நிழற்படத்தை பெற்றுக் கொள்வதற்கும் காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்