12 மரங்களை அகற்றுவதற்கு நான்கு இலட்சம் கோரும் வனவள திணைக்களம்

IMG 9177
IMG 9177

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காஞ்சூர மோட்டை கிராமத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக பிரதேசசபையின் வீதிக்கரைகளில் உள்ள 12 மரங்களை அகற்றுவதற்கு 4 இலட்சம் ரூபாயை வனவளத்திணைக்களம் கோரியுள்ளது.

குறித்த கிராமத்தில் கடந்த 2012 குடியேறிய மக்கள் தமக்கு வனவளத்திணைக்களத்தால் பல்வேறு அட்டூழியங்கள் இடம்பெற்றுவருவதாக தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமது கிராமத்திற்கு அருகில் உள்ள மருதோடையில் இருந்து ஒன்றரைகிலோமீற்றர் தொலைவில் உள்ள காஞ்சூர மோட்டைக்கு மின்சாரத்தை கொண்டு வருவதற்கான மின்கம்பத்தை பதிப்பதற்கு 12 மரங்கள் தடையாக உள்ளது.

இதனை அகற்றுவதற்கான அனுமதியை வனவள திணைக்களம் வழங்காமல் நீண்டகாலமாக தடை ஏற்படுத்தி வந்தது. இது தொடர்பாக குறித்த மக்கள் ஆர்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்ததுடன் பல்வேறு அரசியல்வாதிகளிடமும் தமது பிரச்சனையை எடுத்து கூறியிருந்தனர்.

தற்போது குறித்த மரங்களை அகற்றுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அதற்காக வனவளத்திணைக்களம் 4 இலட்சம் ரூபாயை மரங்களின் மீள்நடுகைக்காக கோரியுள்ளது. இது தொடர்பாக மின்சார சபையினருக்கு கடிதம் அனுப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் சிங்கள குடியேற்றம் மற்றும் கிரவல் அகழ்வு செயற்பாடுகளிற்காக ஆயிரக் கணக்கிலான ஏக்கர் காடுகள் எந்தவித அனுமதியும் இன்றி அரசினாலும், தனிநபர்களாலும் அழிக்கப்பட்டுவரும் நிலையில் தமிழர்களின் பூர்விக கிராமமான காஞ்சூரமோட்டைக்கு மின்சார இணைப்பினை பெறுவதற்காக 12 மரங்களை அகற்றுவதற்கு வனவளத்திணைக்களம் நான்கு இலட்சத்தை கோருகின்றமை பல்வேறு தரப்புகளிடத்திலும் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.