மஹர சிறைச்சாலை மோதல்; இறுதி அறிக்கை கையளிக்க தீர்மானம்

mahara 01
mahara 01

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதி கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் உறுப்பினர் ஒருவர் இதனை குறிப்பிட்டார்.

இதற்கமைய நீதியமைச்சரிடம் இதனை கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலுக்கான திட்டமிடலில் 8 பேர் முன்னிலை வகித்தமை தொடர்பான தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

அத்துடன் கொலை செய்யப்பட்ட சமயங் எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரின் உதவியாளர் ஒருவர் இந்த மோதலுக்கு முன்னிலை வகித்து திட்டமிட்டுள்ளமை தொடர்பான தகவல்களும் தெரியவந்துள்ளன.

இதேவேளை மோதலின் போது மரணித்த 11 பேரில் நான்கு சரீரங்களில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தகனம் செய்யப்பட்டன.

அத்துடன் மேலும் இரண்டு கைதிகளின் சரீரங்களுக்கான உடற்கூற்று பரிசோதனை நடவடிக்கை தற்போது இறுதி செய்யபட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அஜித் ரோஹன குறிப்பிட்டார்.