அன்டிஜன் பரிசோதனைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-அஜித்ரோஹண

ajith rohana
ajith rohana

கொவிட்-19 வைரஸ் தொற்றின் உப கொத்தணிகள் உருவாகுவதை தடுக்கும் வகையிலேயே மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு எழுமாறாக அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு முழுமையான ஒத்திழைப்பை வழங்குமாறும் நாட்டு மக்களிடம் கேட்டுக் கொள்வதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக 1,740 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நபர்களுக்கான அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பரிசோதனைகள் மேல்மாகாணத்திலிருந்து வெளியேற பயன்படுத்தப்படும் 11 இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், வைரஸ் பரவலின் உப கொத்தணிகள் உருவவதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இந்தக் காலப்பகுதிகளில் வீதி விபத்துகள் அதிகளவில் இடம்பெற்று வருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதனால் அவற்றை தடுப்பதற்காக 9000 பொலிஸார் 24 மணி நேரமும் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது வாகன சாரதிகள் கவனமாக தங்களது வாகனங்களை செலுத்துவதுடன், பயணிகளும் , பாதசாரதிகளும் வீதி பாதுகாப்பு ஒழுங்கு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இந்நிலையில் காவல்துறையினரின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கமைய மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக இதுவரையில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.