நிதி இன்மையால் நிவாரணங்களை வழங்க முடியவில்லை: கடன்பட்டே வழங்குகிறோம்-பிரதேச செயலாளர்.

DSC 0517

உரிய நிதி ஒதுக்கப்படாமையினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு நிவாரணங்களை வழங்குவதில் சிரமமான நிலமை காணப்படுவதாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தெரிவித்தார்.


வவுனியாவில் கொவிட்19 தனிமைப்படுத்தல் காரணமாக தவித்து வரும் குடும்பங்களிற்கு நிவாரணங்கள் எவையும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பாக அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களிற்கு  நிவாரணம் வழங்குவதற்கு உரிய ஒதுக்கீடுகள் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. எனினும் கூட்டுறவுச்சங்கத்திடம் கடன்பட்டே அந்த மக்களுக்கான நிவாரணங்களை வழங்கி வருகின்றோம். குறைந்த எண்ணிக்கையுடையவர்கள் என்றால் கடன்வாங்கி வழங்கலாம். அதிகமான தொகையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையால் நிதி ஒதுக்கீடு இல்லாமல் அதனை சீரான முறையில் வழங்க முடியவில்லை.


தற்போது எமது பிரிவில் திருநாவற்குளத்தில் 30 குடும்பங்களும், சாளம்பைக்குளத்தில் 90 குடும்பங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100 ற்கும் மேற்பட்ட குடும்பங்களிற்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையால் அவர்களிற்கான நிவாரணத்தினை வழங்குவதற்கு அதிகமான நிதி தேவையாகவிருக்கிறது. எனினும் இன்றையதினமும் கூட்டுறவுசங்கத்திடம் 100 குடும்பங்களிற்கான உலருணவு பொதிகளை கடன் அடிப்படையில் வழங்குமாறு கேட்டுள்ளோம். எனவே சிரமத்திற்கு மத்தியிலேயே நிவாரணப்பணியினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.