வடக்கில் இந்த மாதம் 130 பேருக்கு கொரோனாத் தொற்று !

.கேதீஸ்வரன்
.கேதீஸ்வரன்

யாழ். மருதனார்மடம் பொதுச்சந்தை கொத்தணி பரம்பல் மூலம் நேற்று வரை 109 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அதற்கமைய உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 42 தொற்றாளர்களும், தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 தொற்றாளர்களும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 தொற்றாளர்களும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 தொற்றாளர்களும், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 தொற்றாளர்களும், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 தொற்றாளர்களும், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு தொற்றாளரும், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரு தொற்றாளரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் வடக்கு மாகாணத்தில் நேற்று வரையான டிசம்பர் மாத தொற்றாளர்களது எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில், மருதனார்மடம் கொத்தணியில் 109 பேரும், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொழும்பு கொத்தணியுடன் தொடர்புட்டு 04 பேரும் உள்ளடங்கியதாக 113 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, வவுனியா மாவட்டத்தில் 10 தொற்றாளர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 05 தொற்றாளர்களும், மன்னார் மாவட்டத்தில் ஒரு தொற்றாளரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு தொற்றாளரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வவுனியாவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யட்டு நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

இம்மரணமானது வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்று காரணமாக ஏற்பட்ட முதலாவது மரணமாகப்  பதிவாகியுள்ளது எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் கூறினார்