விடுதலை வீரர்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்துகொண்டிருப்பர் – விக்கி

‘எமது மக்கள் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது விடுதலை வீரர்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்துகொண்டிருப்பர்’ என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார்.

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையின் முழுவடிவம்:

மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் வென்றெடுப்பதற்குமாக தமது இன்னுயிர்களை ஈகம்  செய்த விடுதலை வீரர்களை நினனவுகூர்ந்து நினைவு நாள் அனுஷ்டிப்பது வரலாற்று காலம் தொட்டு உலகம் பூராகவும் மனித நாகரிகத்தின் முக்கிய பண்பாக காணப்படுகின்றது.

விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்து அவர்கள் சார்ந்த ஒரு ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் வருடா வருடம்  நினைவு நாளை அனுஷ்டிப்பது  அந்த விடுதலை வீரர்களின் தியாகத்தை நன்றியுடன் நினைவு கூருவதற்கு மட்டுமன்றி அவர்களின் உறவினர்களின் உள்ளக் குமுறல்கள் மற்றும் வேதனைகளுக்கான ஒரு ஆறுதலை அளிப்பதற்கும் வழிவகுக்கிறது. 

ஆனால், யுத்தம் நடைபெற்றபோது தமது உயிர்களை நீர்த்த விடுதலை வீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவு கூருவதற்கு கடந்த காலங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பல்வேறு தடைகளும் இடைஞ்சல்களும் நாகரிகமற்ற முறையில் ஏற்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இருந்தபோதிலும், சட்டம் ஒழுங்கு மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத முறையில் மிகவும் அமைதியான முறையில் உணர்வுபூர்வமாக  கார்த்திகை மாத நினைவுகூரலை எமது மக்கள் செய்துவருகிறார்கள்.

நாளை 27 ஆம் திகதி வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நாள்  நிகழ்வுகள் அமைதியான முறையில் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக அறிகின்றேன். அமைதியான வழியில் உரிய சட்ட வழிமுறைகளை பின்பற்றி எமது மக்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன். நாட்டில் நிலையான சமாதானத்தையும், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பாடுபடப்போவதாக கூறியிருக்கும் புதிய அரசாங்கம் இந்த  நினைவேந்தல் நிகழ்வுகள் எந்த இடையூறுகளும் இன்றி நடைபெறுவதற்கு ஆவன  செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். 

எமது மக்கள் சுதந்திரமாகவும் சகல உரிமைகளுடனும் வாழவேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது விடுதலை வீரர்கள் எமது மக்களின் மனங்களில் எப்பொழுதுமே வாழ்ந்துகொண்டிருப்பர்.