கொக்குளாய் கடல் நீரேரியில் தடை செய்யப்பட்ட தொழில்களை தடுக்குமாறு மீனவர்கள் கோரிக்கை!

meenavar issu 19
meenavar issu 19

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவ குடும்பங்கள் தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் அந்தவகையில் முல்லைத்தீவு பெருங்கடலையும் கடல்நீரேரிகளையும் நம்பி சுமார் 5000 குடும்பங்களுக்கு மேல் தொழில் செய்து வருகின்ற நிலையில் இந்த மீனவர்களுடைய வாழ்வு பல்வேறு சவால்கள் நிறைந்ததாக மாறி வருகின்றது.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருங்கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்ததாக அண்மையில் முல்லைதீவில் மீனவர்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வந்தமை அனைவரும் அறிந்ததே.

இவ்வாறு இந்திய மீனவர்களின் இழுவை படைகளின் அத்துமீறிய செயற்பாடுகள் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் என முல்லைத்தீவு கடலில் கடல் தொழில் செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மீனவ மக்கள் தற்போது கடல் நீர் ஏரிகளில் கூட தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கடல்நீர் ஏரியை நம்பி பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வகையிலே குறித்த கடல் நீரேரியில் சிறிய தோணிகளை கொண்டு மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மீனவ மக்களுக்கு பல்வேறு சவால்கள் விடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையிலேயே முல்லைத்தீவு கொக்கிளாய் கடல் நீரேரியில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மீனவர்கள் சட்டவிரோத கூட்டு வலை தொழிலை மேற்கொள்வதால் மீனினங்கள் அழிந்து வருவதோடு தமது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கூட்டு வலை தொழிலானது தடைசெய்யப்பட்ட தொழிலாக காணப்படுகின்ற போதும் குறித்த புல்மோட்டை மற்றும் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதிகளில் இருக்கின்ற மீனவர்கள் குறித்த கூட்டு வலை தொழிலில் அதிக அளவில் ஈடுபடுவதால் தமது கடல்நீரேரியில் சிறிய மீனினங்கள் கூட அளிக்கப்படுவதோடு தமது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக குறித்த கடல் நீரேரியில் இயந்திரம் பூட்டிய படகுகள் ஓடுவதற்கு தடை இருக்கின்ற போதும் எந்தவித தடைகளும் இன்றி இயந்திரப் படகுகள் குறித்த கடல் நீரேரியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட படகுகள் நாளாந்தம் தொழிலில் ஈடுபடுவதால் அந்த இயந்திரப் படகுகளின் எண்ணை கழிவுகளால் கடல் மாசடைவதுடன் மீன் இனங்களின் உற்பத்தியும் குறைவடைகின்றது அதைவிடவும் சட்டவிரோதமான மீன்பிடியால் சிறிய மீன் இனங்கள் கூட அழிக்கப்படுவதால் கடல் வளம் முற்றாக அழிந்து தமது நாளாந்த வாழ்வுக்கு கூட மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியவில்லை என்று குறித்த மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

எனவே குறித்த கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் மிக விரைவாக குறித்த சட்டவிரோத தொழில்களை நிறுத்தி திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இயந்திர படகுகள் கொக்குளாய் கடல் நீரேரிக்கு வருவதை தடுக்கும் முகமாக கடற்படையின் காவலரண்களை அமைத்து அவர்கள் இங்கே வந்து மீன் இனங்களை அழித்து தங்களுடைய வாழ்வாதாரத்தை இல்லாது செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறிப்பாக கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி குடத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து சிறிய வள்ளங்களில் சென்று மீன் பிடித்து வாழும் பல்வேறு குடும்பங்கள் இன்று தமது அன்றாட வாழ்வாதாரத்திற்காக 200 ரூபா கூட உழைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிடுகின்றனர். எனவே குறித்த சட்ட விரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தி இயந்திரப் படகுகள் களப்பில் பயணிப்பதை தடுத்து உடனடியாக தமது வாழ்வாதாரத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறு மீனவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கோரி நிற்கின்றனர்.