கோப் குழு 5 அரச நிறுவனங்களுக்கு அழைப்பு!

b9a410af672843d8a11e338edcc12faf XL
b9a410af672843d8a11e338edcc12faf XL

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு ஜனவரியில் 05 அரச நிறுவங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை பரிசீலனை செய்யவுள்ளன.

அதன் பிரகாரம் சுயாதீன தொலைக்காட்சி சேவை, மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு அமைய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி ஜனவரி மாதம் 06, 08, 19, 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் கோப் குழு கூடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 06 ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 08 ஆம் திகதி மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் முதலீட்டு முகாமைத்துவம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கையும், ஜனவரி 19 ஆம் திகதி இலங்கையில் பெற்றோலியத்தை சேமித்துவைத்தல் மற்றும் விநியோகித்தல் பற்றிய கணக்காய்வு அறிக்கையும் பரிசீலனை செய்ய தீர்மானித்திருக்கின்றோம்.

அத்துடன் ஜனவரி 21 ஆம் திகதி தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பிலும், ஜனவரி 22 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் தற்போதைய நிலைமை பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கையும் கோப் குழு கூட்டத்தின் போது கலந்துரையாடப்படவுள்ளது என்றார்.