அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் ; காவல்துறையினர் குழப்பம்

IMG 20210105 141450 1
IMG 20210105 141450 1

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியை கொவிட் 19 தொற்றை காரணமாக கொண்டு பிரதேச செயலக வளாகத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் மற்றும் புலானாய்வு பிரிவினர் தடுத்து நிறுத்தினர்.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு அரசியல் பிரமுகர்களும் , பொது அமைப்பை சார்ந்தவர்களும் கருத்து தெரிவிப்பதை பதிவுசெய்ய வேண்டாம் என கூறியதோடு பதாகைகளை கைப்பற்றி சென்றனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் வாலிப முன்னணியின் துணைச்செயலாளர் அ. நிதான்சன் தெரிவிக்கையில், சிறைகளில் தற்போது கொவிட் தொற்று வேகமாக பரவுவதன் காரணமாக தமிழ் அரசியல் கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்களின் குடும்பத்தினர் வேதனையடைகின்றனர்.

அது மாத்திரமல்லாது தமிழ் அரசியல் கைதிகள் பலர் வைரஸ் தாக்கத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மிருசுவில் படு கொலையாளி சுனில் ரத்னாயக்க போன்றோரை பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளின் நிலையறிந்து உடனே விடுதலை செய்ய முடியாது என கேள்வியெழுப்பினார்.

திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் ஆர் .டபிள்யூ கமலராஜன் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு பகுதிகளில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக திருக்கோவில் பிரதேச செயலாளரிடம் மகஜரினை கையளித்திருந்தோம் ஆகவே புதிய ஆண்டில் நல்லதொரு செய்தியாக விடுதலை செய்யுங்கள் என குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி குறிப்பிடுகையில்,

இலங்கை அரசினால் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட அனைத்து அரசியல் கைதிகளும் கொவிட் தொற்றின் காரணமாக வருத்திக் கொண்டிருப்பது மன வேதனையை தருகின்றது. இவர்களை இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். உலக நாடுகள் அரசியல் கைதிகள் விடையத்தில் கவனம் செலுத்தி விடுதலை செய்ய கோருகின்றோம்.

ஐக்கிய நாடுகளின் உலக சாசனத்தின் படி எந்த ஒரு அரசியல் கைதிகளையும் குற்றமின்றி விசாரணையின்றி தடுத்து வைப்பது குற்றமாகும். இது மனித உரிமை மீறலாகவே பார்க்கப்படுகிறது. இச் சாசனத்தில் இலங்கை அரசும் கைச்சாத்திட்டுள்ளது விசாரணை இன்றி தடுத்து வைப்பது குற்றம் என வடக்கு கிழக்கு தமிழ் உறவுகள் சார்பாக வலியுறுத்துகிறேன் என கருத்தினை முன்வைத்தார் .